Saturday, April 13, 2024

நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி பரபரப்பு புகார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்த தமிழ்த் திரையுலகத்தில் திடீரென்று இன்றைக்கு ஒரு அணுகுண்டை வீசி பரபரப்பாக்கியிருக்கிறார் நகைச்சுவை நடிகரான சூரி.

தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளதுதான் ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி கலந்த நியூஸ்.

ஏனெனில் சூரி புகார் செய்திருக்கும் 2 பேர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவும் முன்னாள் காவல்துறை உயரதிகாரியான ரமேஷ் குடவாலா என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

சூரி தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் விஷ்ணு விஷாலும் ஒரு நாயகனாக நடித்திருந்தார். அப்போதிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரும்… எப்படி போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு விரோதிகளானார்கள் என்பது தெரியாமல் திரையுலகத்தினர் முழிக்கிறார்கள்.

நடிகர் சூரி போலீஸில் அளித்திருந்த புகாரில், “நான் ‘வீரதீர சூரன்’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியிருந்தது. அதைக் கேட்டபோது அந்தப் படத்தின் தயாரிப்பாளரான அன்புவேல் ராஜன் ‘தன்னிடம் இப்போது அவ்வளவு பணம் கையில் இல்லை. ஆனால் 3 கோடி ரூபாய் அளவு மதிப்புள்ள ஒரு நிலம் இருக்கிறது. நீங்கள் மீதப் பணத்தைக் கொடுத்தால் உங்களுக்கே அந்த நிலத்தை வாங்கித் தருவதாகக்’ கூறினார்.

நானும் இதனை நம்பி என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாயை அவர்களிடத்தில் நிலம் வாங்குவதற்காகக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நிலத்தை வாங்கித் தரவில்லை. என்னிடமிருந்து வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதற்கு நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவான முன்னாள் போலீஸ் உயரதிகாரி ரமேஷ் குடவாலாவும் உடந்தையாக இருந்தார். எனவே, அவர்கள் இருவருடமிருந்தும் என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீது போலீஸில் நடவடிக்கை எடுக்காததால் இது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூரி. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சென்னை போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தச் செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடிகர் விஷ்ணு விஷால் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புச் செய்தியும் வந்துவிட்டது.

விஷ்ணு விஷால் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். ‘கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவருமே முழுமையான தகவல்களை வெளியிடாமல் இருப்பதால் இரு தரப்பினருக்குமே வெளியில் சொல்ல முடியாத ஏதோவொரு சிக்கல் இருப்பதை உணர முடிகிறது.

விசாரணையில் தெரிய வரட்டும்..!

- Advertisement -

Read more

Local News