நடிகர் ரஜினிகாந்த நடித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் பற்றியும், அதன் இயக்குநர் சிவா பற்றியும் சில சுவாரசியமான செய்திகளை ரஜினி ‘ஹூட் செயலி’ மூலமாகப் பேசி வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த ‘அண்ணாத்த’ படத்தின் கதையை சொல்லும்போதே சிவா தன்னை அழ வைத்துவிட்டதாக” நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரஜினி.
அவர் மேலும் பேசும்போது, “நாம் சேர்ந்து படம் பண்ணுவோம்.. எனக்கு கதை தயார் செய்யுங்கள்” என்று சிவாவிடம் நான் சொன்னபோது, “உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி ஸார்” என்று சிவா சொன்னார். எனக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “எனக்கு ஹிட் படத்தினை கொடுப்பது ரொம்ப ஈஸி” என இதுவரை யாருமே என்னிடம் சொன்னது இல்லை. “எப்படி ஈஸி என்று சொல்கிறீர்கள்..?” என்று சிவாவிடமே திருப்பிக் கேட்டேன்.
அதற்கு அவர், “உங்களுக்குப் படம் செய்யும்போது இரண்டு விசயம்தான் முக்கியம். முதலில் நல்ல கதையில் நீங்கள் இருக்க வேண்டும். ‘தளபதி’, ‘முத்து’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’ ஆகியவை நல்ல கதைகள்; அதில் நீங்கள் இருந்திங்க.. அடுத்ததா நீங்க கிராமத்து கதை பண்ணி ரொம்ப நாள் ஆகிறது. இது ரெண்டும் இப்போது புது படத்தில் இருந்தால் போதும் சார்”னு சொன்னார். அவர் அப்படி சொன்னவிதம் எனக்கு பிடித்திருந்தது.
கதை சொல்ல 15 நாட்கள் அவகாசம் கேட்டார், ஆனால், 12-வது நாளிலேயே வந்து கதை சொன்னார். கதை சொல்லும்போது “தண்ணி வேணும்”னு சொன்னார். தண்ணி குடிச்சுக்கிட்டேதான் கதை சொன்னார். ‘தண்ணி’ என்றால் சாதாரண தண்ணிதான். வேறு எதையும் நினைக்காதீர்கள். கதை சொல்ல சொல்ல, கிளைமேக்ஸ்ல என்னை அறியாமலேயே எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.
“இப்போது என்னிடம் சொன்னதை அப்படியே படமா எடுங்க” என்று சிவாவிடம் கூறினேன். “அண்ணாத்த’ படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பிடிக்கும்” என்று சிவா சொன்னார். அதேமாதிரி சொல்லி அடித்திருக்கிறார் சிவா.
இப்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சிவாவுக்கு நன்றி. ‘அண்ணாத்த’ என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம்” என்று ரஜினிகாந்த் அந்தப் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.