1981-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. சிறந்த கதை, திரைக்கதைக்காக இன்றைக்கும் இத்திரைப்படம் பேசப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ராஜேஷ் கூறியிருக்கிறார்.
இது பற்றி நடிகர் ராஜேஷ் பேசும்போது, “கன்னிப் பருவத்திலே’ படம்தான் நான் நடித்த முதல் திரைப்படம். அதில் நடித்து முடித்த பின்பும்கூட ஆறு மாதங்கள் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன்.
இந்த நேரத்தில்தான் பாக்யராஜ் ஸார் இந்த ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தைத் துவக்கினார். நான் ‘கன்னிப் பருவத்திலே‘ படத்தில் நடித்தபோது என்னுடன் அவரும் நடித்திருந்ததால் என்னைப் பற்றி அவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. அந்த டாக்டர் கதாபாத்திரத்திற்கு என்னைத்தான் அவர் தேர்வு செய்தார்.
ஆனால், பாக்யராஜின் மனைவி பிரவீணாவுக்கு இது பிடிக்கவில்லை. “நான் அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க மாட்டேன்” என்று அவர் சொன்னார். ஆனால் பாக்யராஜ் “ராஜேஸுக்கு கோட், சூட் போட்டுவிட்டால் டாக்டர் கேரக்டருக்கு பொருத்தமாகத் தெரிவார். இங்கிலீஷூம் ஸ்டைலாகப் பேசுவார். அதனால் அவர்தான் நடிக்க வேண்டும்…” என்று சொல்லிவிட்டார்.
முதலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவக்குமாரை அணுகியிருக்கிறார் பாக்யராஜ். ஆனால் சிவக்குமார் மறுத்துவிட்டார். “வெறும் 8 சீன்ஸ்தான் இருக்கு. இதுல எதுக்கு நடிக்கணும்..?”ன்னு சிவக்குமார் சொல்லிட்டாராம். பின்புதான் என்னை அழைத்தார் பாக்யராஜ்.
அந்தப் படத்தில் ஒரு காட்சியில் “அம்மா உசிரோட இருக்காங்களா?”ன்னு பாக்யராஜ் கேட்பார். அதற்கு நான் கொஞ்சம் நேரம் எடு்த்துக் கொண்டு பதில் சொல்வேன். இதைப் படமாக்கும்போது பாக்யராஜுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் “இதுதான் சரி” என்று நான் அவரிடத்தில் சொன்னேன். அவரும் விருப்பமில்லாமல் ஒத்துக் கொண்டார்.
ஆனால், கடைசியாக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அந்தக் காட்சிக்கு பின்னணி இசை கோர்க்கும்போது கிடைத்த எபெக்ட்டை பார்த்துதான் பாக்யராஜ் அதை ஒத்துக் கொண்டார். பின்பு அந்த நடிப்புக்காகவே என்னைப் பாராட்டினார்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக இத்தனையாண்டுகளாக தொடர்ச்சியாக நான் பாராட்டுக்களைப் பெற்று வருகிறேன். இதற்காக பாக்யராஜ் ஸாருக்குத்தான் நான் நன்றி சொல்லணும்..” என்றார் நடிகர் ராஜேஷ்.