ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களிலும் அற்புத நடிப்பை தரும் வல்லமை கொண்டவர் நடிகர் ரஹ்மான்.
தமிழில் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் தற்போதும் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் தற்போது நடந்து வரும் இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த ரஹ்மான், இன்று குலுமணாலியில் ‘சமரா’ என்ற மலையாளப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் சார்லஸ் ஜோசப்பின் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் இந்தப் படம் திரில்லர் பாணி க்ரைம் கதையில் உருவாகிறது.
இந்தப் படத்தில் 15 நாட்கள் நடித்துவிட்டு மீண்டும் உடனடியாக ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ரஹ்மான்.
இது தவிர தமிழில் இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராமின் இயக்கத்திலும் ஒரு படத்தில் ரஹ்மான் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும், அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ‘ஜெயம்’ ரவி ஆகியோர் நடிக்கும் படமான ‘ஜன கன மன’, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களிலும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஓய்வின்றி பிஸியான நடிகராக நடித்து வருகிறார் ரஹ்மான்.