Friday, April 12, 2024

தெலுங்கு நடிகர்கள் சங்கத்திலிருந்து நடிகர் பிரகாஷ்ராஜ் விலகினார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் புதிய தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் அந்தச் சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ்ராஜும் போட்டியிட்டனர்.

பிரகாஷ்ராஜ் தலைமைக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு அளித்தனர். விஷ்ணு மஞ்சுவுக்கு அவரது அப்பா மோகன்பாபு, அவரது ஆதரவாளர்கள், சங்கத்தின் முன்னாள் நிர்வாகியான நடிகர் நரேஷ் உள்ளிட்டவர்கள் ஆதரவு அளித்தனர்.

இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் 110 வாக்குகள் வித்தியாசத்தில் மஞ்சு விஷ்ணுவிடம் தோல்வியடைந்துள்ளார்.

மேலும் அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீகாந்தும், 4 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் பிரகாஷ்ராஜ் அன்னியர். ஆந்திராவை சேர்ந்தவர் அல்ல. அவர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் அல்ல. தெலுங்கரும் அல்ல. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். வெளியிலிருந்து வந்தவர். தெலுங்கு தேசத்தினர் தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே மஞ்சு விஷ்ணு தரப்பினரால் முன் வைக்கப்பட்டது.

பிரகாஷ்ராஜின் தோல்விக்கு இந்தப் பிரச்சாரமே காரணம் என்று திரைத்துறையினர் கருதுகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ்ராஜ், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு ‘மா’ சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் இது குறித்து பிரகாஷ்ராஜ் பேசும்போது, “நான் கடந்த 21 வருடங்களாக இந்தச் சங்கத்தில் இருக்கிறேன். ஆனால், என்னை வெளியிலிருந்து வந்த ஆள், விருந்தினர் என்று அடையாளப்படுத்தியே இந்தத் தேர்தலில் தோற்கடித்திருக்கின்றனர். தீவிரவாதி, சமூகத்துக்கு எதிரானவன் என்றெல்லாம் சொன்னார்கள். திரைத்துறையினர் இப்படி ஒரு விஷயத்தைச் சொன்னதுதான் என்னை அதிகம் காயப்படுத்தியது.

எதிர்த் தரப்பில் ஜெயிப்பதற்கு அவர்கள் அதைச் சொன்னாலும் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அதையே ஆதரிப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், இப்படி ஒரு நோக்கத்துடன் இருக்கும் சக கலைஞர்களுடன் என்னால் உடன் பணியாற்ற  முடியாது.

எனவே நான் என்னுடைய சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன். ஆனால், நான் தொடர்ந்து தெலுங்குத் திரைப்படங்களில் நடிப்பேன். விஷ்ணு மஞ்சுவுடன் நடிக்கக் கூடத் தயாராக இருக்கிறேன்.

நான் தெலுங்கு மாநிலத்தில் பிறக்காதது என் தவறல்ல. துரதிர்ஷ்டமே. இந்தத் தோல்வியை ஏற்றுக் கொண்ட பின்னரே ராஜினாமா செய்கிறேன். எனக்கும் தன்மானம் உள்ளது. அதனால் அவர்கள் என்னை விருந்தினராகப் பார்ப்பதால் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். இப்படிப் பாகுபாடு காட்டுபவர்களோடு என்னால் இருக்க முடியாது…” என்று உருக்கமாகப் பேசினார்.

முன்னதாக, பிரகாஷ்ராஜை இந்தத் தேர்தலில் ஆதரித்த, நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவும் சங்கத்திலிருந்து விலகுவதாக நேற்று இரவு அறிவித்திருந்தார். ‘மா’ சங்கத்தில் சாதி ரீதியாகவும், மாநில மொழி ரீதியாகவும் அதிகப் பாகுபாடு காட்டப்படுவதால் இம்முடிவை தான் எடுத்திருப்பதாகக் நாகபாபு தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

Read more

Local News