பிரபு நடிப்பில் 1985-ம் ஆண்டு வெளியான கன்னிராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். தொடர்ந்து ஆண்பாவம், நெத்தியடி, மனைவி ரெடி, கபடி கபடி, கோபாலா கோபாலா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பாண்டியராஜன், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வெற்றிகளை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தொகுத்து வழங்கும் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர்,
“1987-ம் ஆண்டு நாயகன் படம் வெளியானபோது நான் கமல் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்த கடிதத்தை படித்து பார்த்த கமல்ஹாசன் என்னை சந்தித்தபோது இது குறித்து பேசினார். ‘ஒரு பிரபல இயக்குநராக இருந்தும் எனக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கடிதத்தை படித்தேன். ரொம்ப மெனக்கிட்டு எழுதியிருக்கீங்க. கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நான் கூட நினைப்பேன். நாகேஷ் சார் எவ்ளோ பெரிய ஆளு அவருக்கு லெட்டர் எழுத வேண்டும் என்று. அதேபோல் சிவாஜியின் நடிப்பு குறித்து லெட்டர் எழுத வேண்டும் என்று நினைப்பேன்.
அதற்குள் அவர்களின் அடுத்த படம் ரிலீஸ் ஆகிவிடும். இதனால் அது அப்படியே மறந்துவிடும்” என்றவர், நான் உங்களுக்கு படவாய்ப்பு கொடுக்கிற ஆளும் இல்லை. நீங்களே ஒரு இயக்குனர். எனக்கும் நீங்கள் வாய்ப்பு கொடுக்கப்போவதில்லை. ஆனால் எனக்கு லெட்டர் எழுதியிருக்கிறீர்கள் “என்று பாராட்டினார்.
ஒரு சமயத்தில் அவரின் படம் வெளியானபோது அவருக்கு நான் லெட்டர் எழுதவில்லை. அப்போது “என்ன லெட்டரே வரவில்லை. படம் அவ்ளோ மோசமா”என்று கேட்டார்.
அப்படி ஒரு ஜாலியானவர் கமல்ஹாசன். அவர் தன்னையே செதுக்கிக்கொள்கிறார்” என்று பாண்டியராஜன் கூறியுள்ளார்.