வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் நானி இன்று சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது…நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம். அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம்.
ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும். மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி பதிலளிக்கையில்…
அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அது நல்லது எனறே நினைக்கிறேன்.
எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.
ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.