தமிழ்ச் சினிமா வரலாறு-43
‘நடிகவேள்’ என்று திரை ரசிகர்கள் கொண்டாடிய நடிகர் எம்.ஆர்.ராதா நடித்த முதல் திரைப்படம் ‘ராஜசேகரன்’. 1937-ம் ஆண்டு வெளியான அந்தத் திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார் எம்.ஆர்.ராதா.
மிகச் சிறந்த பாராட்டுக்களை அந்தப் படம் அவருக்குப் பெற்றுத்தந்த போதிலும் அந்தப் படத்தைத் தொடர்ந்து எம்.ஆர்.ராதாவைத் தேடி திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை. அதற்குக் காரணம் ‘ராஜசேகரன்’ படத்தின் தோல்வி.
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் திறமையே இல்லை என்றாலும் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிவதும், படம் வெற்றி பெறாவிட்டால் அந்தப் படத்தில் நடித்தவர் எவ்வளவு திறமையான நடிகராக இருந்தபோதிலும் அவர் இருக்கும் திசையையே திரும்பிப் பார்க்க மறுப்பதும் இந்தத் திரையுலகில் காலம் காலமாகவே நடந்து வருகிறது என்பதற்கு எம்.ஆர்.ராதாவும் ஒரு உதாரணம்.

அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களிலிருந்து மாறுபட்டிருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் எம்.ஆர்.ராதாவின் திறமையை மதித்து ‘சந்தனத் தேவன்’, ‘சத்தியவாணி’ ஆகிய இரண்டு படங்களில் அவரைக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.
‘மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்’ என்ற அவரது பெயரை சுருக்கி ‘எம்.ஆர்.ராதா’ என்று அவருக்கு பெயர் சூட்டிய பெருமையும் டி.ஆர்.சுந்தரத்துக்கே சொந்தமானது.
எம்.ஆர்.ராதா நடித்த அந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை அடையாததால், மீண்டும் நாடக மேடைக்குத் திரும்பிய எம்.ஆர்.ராதா நடித்த நாடகம்தான் ‘ரத்தக் கண்ணீர்’.
அந்த நாடகத்தின் பிற்பகுதியில் குஷ்டரோகியாக நடித்த எம்.ஆர்.ராதா இன்று இருப்பதைப்போல மேக்கப் வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் கால கட்டத்திலேயே தன்னுடைய கற்பனைத் திறனின் உதவியுடன் குஷ்ட ரோகியின் தோற்றத்தை மிகவும் வித்தியாசமாக அமைத்துக் கொண்டார்.

அந்த குஷ்டரோகியின் வேடத்தில் அவரைப் பார்க்க அவரது குடும்பத்தினரே பயப்படுவார்களாம். அவை எல்லாவற்றிற்கும் மேலாக ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்திற்கு ஒரு முறை தலைமை தாங்க வந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் ராதாவைத் தொட்டுப் பேச பயப்பட்டது மட்டுமின்றி அவரிடமிருந்து இரண்டடி தள்ளியே நின்று பேசினாராம்.
எம்.ஆர்.ராதா எண்ணற்ற நாடகங்களில் நடித்திருந்தாலும் ‘ராதா’ என்று சொன்னவுடன் எல்லோரது நினைவிற்கும் வரக்கூடிய ஒரே நாடகம் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம்தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அந்த நாடகத்தில் அவரது ஆர்ப்பாட்டமான நடிப்பைப் பார்த்து விட்டுத்தான் ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டி பெருமைப்படுத்தினார் திராவிட கழகத் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரிசாமி.
தமிழ் சினிமாவின் ஆரம்பக் கட்டத்தில் புகழ் பெற்ற நாடகங்களே திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அந்த வரிசையில் எம்.ஆர்.ராதாவின் “ரத்தக் கண்ணீர்” நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க பல தயாரிப்பளர்கள் ஆசைப்பட்டார்கள் என்றாலும், ராதாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பயந்து கொண்டு அவர்களில் பலர் தங்களது ஆசையை மனதிலேயே புதைத்துக் கொண்டு விட்டனர்.

‘பராசக்தி’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகம் செய்த நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைப் படமாக்கும் நோக்கத்துடன் எம் ஆர்.ராதாவை சந்தித்துப் பேசினார்.
சமூக சீர்திருத்தக் கருத்துக்களோடு ‘பராசக்தி’ படத்தைத் தயாரித்தவர் என்பதால் பெருமாள் முதலியார் மீது எம்.ஆர்.ராதாவுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அதன் காரணமாக சினிமாக்காரங்க பழக்கத்தைவிட்டே நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் நீங்கள் விரும்பிக் கேட்பதால் நடிக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட எம்.ஆர்.ராதா அந்தப் படத்தில் நடிக்க பல நிபந்தனைகளை விதித்தார்.
“சினிமாவிற்காக நாடகத்தை விட்டுவிட்டு நான் வரமாட்டேன். என்னைப் பொருத்தவரைக்கும் சினிமா என்பது சைட் பிசினஸ்தான். ‘ஒற்றைவாடை’ தியேட்டரில் தினமும் என்னுடைய நாடகம் இருப்பதால் இரவில்தான் என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும்…” என்பதை முதல் நிபந்தனையாக சொன்ன எம்.ஆர்.ரதா அடுத்து விதித்த நிபந்தனை கொஞ்சம் விசித்திரமானதாக இருந்தது.

“நான் நாடக நடிகன். அதனால் காமிராவின் இஷ்டத்துக்கு எல்லாம் நான் திரும்பித் திரும்பி நடிக்க மாட்டேன். காமிராவைத் திருப்பி, திருப்பி நீங்கள்தான் என்னை படம் பிடித்துக் கொள்ள வேண்டும்” என்பதை இரண்டாவது நிபந்தனையாக சொன்னார் ராதா.
அடுத்து சம்பளப் பிரச்னை எழுந்தது. தமிழ்த் திரையுலகில் அப்போது அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரே நடிகை கே.பி.சுந்தராம்பாள் மட்டுமே. முதல் படமான ‘நந்தனாரில்’ நடிக்க அவர் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருந்ததை அறிந்திருந்த எம்.ஆர்.ராதா “அந்த அம்மா வாங்கிய சம்பளத்துக்கு மேல் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் போட்டு ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாயை எனக்கு சம்பளமாகக் கொடுத்து விடுங்கள்…” என்றார்.
அவர் சொன்ன எதைக் கேட்டும் பெருமாள் முதலியார் அசரவில்லை. எல்லாவற்றிற்கும் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டார். ஏனெனில் ‘ரத்தக் கண்ணீரின்’ முதுகெலும்பே ராதாதான் என்பதையும் அவர் இல்லாமல் வேறு யார் நடித்தாலும் அந்தப் படம் வெற்றி பெறாது என்பதையும் அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார்..
‘ரத்தக் கண்ணிர்’ கதையில் ராதா ஏற்றிருந்த மோகன் பாத்திரத்திற்கு நிகரான இன்னொரு பாத்திரம் ராதாவின் ஆசை நாயகியான காந்தாவின் பாத்திரம். அந்த பாத்திரத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடிக்க நடிகைகள் எல்லோருமே பயந்தனர். அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகையின் தேடல் நடந்து கொண்டிருந்தபோதே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தினமும் இரவு பத்து மணிக்கு நாடகம் முடிந்தவுடன் இரண்டு பெரிய கேரியரில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு படப்பிடிப்பிற்கு கிளம்புவார் எம்.ஆர்.ராதா. படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களும் விதம்விதமாக சமைத்த சாப்பாட்டை அவர் எடுத்துக் கொண்டு வரத் தொடங்கவே படப்பிடிப்பில் எல்லோரும் அவர் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருப்பார்களாம்.
நீண்ட தேடலுக்குப் பிறகு ‘ரத்தக் கண்ணீர்’ படத்தின் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் அப்போது டிகே.சண்முகத்தின் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.என்.ராஜத்தை காந்தாவின் வேடத்திற்கு தேர்வு செய்தனர்.
‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தபோது எம்.ஆர்.ராதா யார் என்பதை எம்.என்.ராஜம் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அதனால், எந்தப் பயமும் இன்றி எல்லா காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்தார் அவர்.
படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே எம்.ஆர்.ராதா எப்படிப்பட்ட ஆற்றல் பெற்ற நடிகர் என்பதையும், நாடக உலகிலும், திரை உலகிலும் அவரது செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்ட எம்.என்.ராஜம் அதற்குப் பிறகு ராதா எதிரில் நடிக்க பயந்தார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராதாவை மாடியிலிருந்து அவர் காலால் எட்டி உதைக்கின்ற காட்சியை படமாக்கத் தயாரானார்கள் கிருஷ்ணனும் பஞ்சுவும்.
காட்சியைப் பற்றி அவர்கள் ராஜத்துக்கு விளக்கிய அடுத்த நிமிடமே, “என்னால் அந்தக் காட்சியில் நடிக்க முடியாது…” என்று மறுத்து விட்டார் எம்.என்.ராஜம்.
அவர் அப்படிச் சொன்னவுடன் வேறு யார் சமாதானப்படுத்தினாலும் அவர் சமாதானம் ஆக மாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட எம்.ஆர்.ராதா அவர் அருகில் வந்தார்.
“இதோ பார். கேமிராவிற்கு முன்னாலே நான் ராதாவும் இல்லே. நீ ராஜமும் இல்லை. நான் மோகன். நீ காந்தா. கதைப்படி மோகனை காந்தாவான நீ எட்டி உதைக்கிறே. அவ்வளவுதான்” என்று எம்.என்.ராஜத்திடம் அவர் பொறுமையாக காட்சியை விளக்கினார்.
ஆனால், அவர் அவ்வளவு சொன்ன பிறகும் எம்.என்.ராஜம் அந்தக் காட்சியில் நடிக்க சம்மதிக்கவில்லை. இறுதியில் அந்தப் படத்தின் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் செய்த தந்திரம்தான் அந்தக் காட்சியில் நடிக்க அவரை சம்மதிக்க வைத்தது.
“இவ்வளவு நாளும் இந்தப் படத்தில் நீ அருமையாக நடிச்சிருக்கே. நீ நினைச்சுக் கூட பார்க்க முடியாத பெயரையும், புகழையும் இந்தப் படம் உனக்கு சம்ம்பாதித்து தரப் போகுது. ஆனால் படம் பூரா இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்த நீ இந்தக் காட்சியில் நடிக்கவில்லை என்றால் நிச்சயம் உன்னை இந்த படத்திலிருந்து எடுத்து விடுவார்கள். இவ்வளவு நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி விடும்…” என்று அவர்கள் இருவரும் சொன்னதற்குப் பிறகுதான் வேறு வழியில்லாமல் மனதைத் தேற்றிக் கொண்டு அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தார் எம்.என்.ராஜம்.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ரத்தக் கண்ணீர்’ படம் எம்.ஆர்.ராதாவிற்கு மட்டுமின்றி எம்.என்.ராஜத்திற்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது.
(தொடரும்)