இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகின் சாக்லேட் பாய் என்றால் அது ஜீவாதான். ஆசை ஆசையாய், தித்துக்குதே, நண்பன் உள்ளிட்ட பல படங்களில் ஜாலி ஹீரோவாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர். அதே நேரம், கற்றது தமிழ், ராம் உள்ளிட்ட படங்களில் சீரியஸ் ரோல்களில் நடித்து அசத்தியவர்.
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறிமுகமானவர். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான விசயத்தைச் சொன்னார்.
“தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் எல்.சிவராமகிருஷ்ணன் என் பேவரைட். அவரது ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பேன். நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரிடம் ஆசை ஆசையாய் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறேன்.
ஒரு முறை விமானத்தில் சென்றபோது, எனது பக்கத்து இருக்கையில் அவர் அமர்ந்தார். ஆகா.. என்ன ஒரு சர்ப்ரைஸ் என குதூகலித்தேன். அவரிடம், ‘வணக்கம் சார்.. நான் ஜீவா.. உங்கள் ரசிகன்.. உங்களது ஆட்டத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்’ என்றேன்.
அதற்கு அவர், ‘மிக்க மகிழ்ச்சி. என்ன பிசினஸ் செய்கிறீர்கள்?’ என்றார்.
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு, ‘நாம் நடிகன்.. ஆகவே எல்லோருக்கும் நம்மைத் தெரியும்’ என்ற எண்ணமும் போய்விட்டது” என்று தனது சுவாரஸ்யமான நினைவைப் பகிர்ந்துகொண்டார் ஜீவா.