நடிகர் ஜெய் இப்போதும் பிஸியான ஹீரோக்களில் ஒருவராகத்தான் இருந்து வருகிறார். இருந்தும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இவர் வில்லனாக நடிக்கவிருப்பது சுந்தர்.சி.க்கு. இந்தப் படத்தை இயக்கவிருப்பது பத்ரி.
சுந்தர்.சி.யின் தயாரிப்பில் நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தைத் தயாரித்து சமீபத்தில்தான் அதனை சன் தொலைக்காட்சியில் மட்டுமே வெளியிட்டு சாதனை படைத்திருந்தார்கள்.
தற்போது பத்ரி அதே வேகத்தோடு தனது அடுத்தப் படத்தையும் துவக்கிவிட்டாராம். இதில் சுந்தர் சி.தான் நாயகன். வில்லனாக ஜெய் என்று தலைகீழ் மாற்றமாக கேரக்டர்களை வடிவமைத்திருக்கிறார்.
சுந்தர்.சி.யின் திரைப்படங்கள்தான் ஜெய்யின் நடிப்பு கேரியரில் மிகப் பெரிய ஏற்றமாக இருந்தது. அந்த நன்றிக் கடனாகக்கூட இந்த வில்லன் வேடத்தை ஜெய் ஏற்றிருக்கலாம்.
இன்னொரு பக்கம் ‘மங்காத்தா’ படத்தில் அர்ஜூன் திடீரென்று அஜீத்திற்கு வில்லனாக நடித்தன் விளைவாக தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அர்ஜூனுக்குக் கிடைத்தது. அது மாதிரியான சூழல் இந்த வில்லன் கதாபாத்திரம் மூலமாகத் தனக்கு அமையும் என்று ஜெய் எதிர்பார்த்திருக்கலாம்.
அவருடைய நம்பிக்கை ஜெயிக்கட்டும்..