‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடிகர் பாபு ஆண்டனி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பாபு ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பில் பாபு ஆண்டனிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை நடிகர் பாபு ஆண்டனியே தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் எனது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக எனக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று பிற்பகலே நான் வீடு திரும்பிவிடுவேன்.
நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் ‘பொன்னியின் செல்வன்’. எனக்கு காயம் ஏற்பட்டும் மணிரத்னம் தைரியமாக என்னை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதித்தார்.
அவர் மன்னிப்பு கேட்டு என்னை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவருக்கு நன்றி. நான் 3 முதல் 4 வாரங்களில் பழையபடி செயல்பட துவங்கி விடுவேன்.
50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். கடவுள் சிறந்தவர்…” என்று குறிப்பிட்டுள்ளார் பாபு ஆண்டனி.