‘மாயி’ படத்தில் இடம் பெற்ற ‘அம்மா.. மாயி அண்ணன் வந்திருக்காக. மாப்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. அப்புறம் நம்ம உறவினர்களெல்லாம் வந்திருக்காக. வாம்மா மின்னல்…’ என்ற வசனத்தை தமிழ்ச் சினிமா ரசிகர்கள் யாரும் சுலபத்தில் மறந்துவிட முடியாது.
தமிழகத்தில் பல்வேறு டிவிக்களிலும், யு டியூப் சேனல்களிலும், பலவித கோணங்களிலும், காட்சிகளிலும் இதே வசனம் இப்போதும் ரிப்பீட் செய்யப்பட்டு வருகிறது.
‘மாயி’ படத்தில் இந்த வசனத்தைப் பேசி நடித்தவர் ‘பாவா’ லட்சுமணன் என்னும் நடிகர்.
இவர் ‘மாயி’ படத்தில் தான் நடித்த கதையை சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
“இயக்குநர் விக்ரமனின் ஆலோசனையின்படி தயாரிப்பு நிர்வாகியாக நான் சூப்பர் குட் பிலிம்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களுக்கு நான் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தேன். அப்போது ‘மாயி’ படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்தது.
அப்போது அன்றைக்கு ஒரு நாள் ராத்திரி சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்த ஜின்னா என்பவர் எப்படி பேசுவார் என்பது பற்றி அலுவலகத்தில் இருந்தவர்களிடத்தில் மிமிக்ரி செய்து காட்டிக் கொண்டிருந்தேன்.
அப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் ஆபீஸுக்கு வந்திருந்த ‘மாயி’ படத்தின் இயக்குநரான சூர்ய பிரகாஷ் இதைக் கேட்டுவிட்டார். உடனேயே என்னிடத்தில் வந்து நம்ம ‘மாயி’ படத்துல ஒரு டயலாக் வைச்சிருக்கேன். அதை இப்போ நீங்க பேசுனீங்களே.. அதே மாடுலேஷன்ல பேசிக் காட்டுங்களேன்…” என்றார். நானும் அதை படத்தில் உள்ளது போலவே பேசிக் காட்டினேன். உடனேயே அவருக்குப் பிடித்துப் போனது. “இந்தப் படத்துல நீங்க நடிச்சாகணும்”ன்னு சொல்லிட்டாரு.
ஷூட்டிங் ஸ்பாட்ல வடிவேலுகிட்ட அவர்தான் என்னை அறிமுகப்படுத்தி வைச்சாரு. வடிவேலு என்னைப் பார்த்திட்டு, “என்ன சேட்டுக்காரப் பையன் மாதிரில்ல இருக்கான்”னு சொன்னாரு. அப்புறமா நான் படத்துல வர்ற மாதிரி மேக்கப் போட்டுட்டு வந்து நின்னப்ப.. “அச்சு அசலா நான் நினைச்ச மாதிரியே இருக்குற..” என்று சொல்லி என்னை அந்தக் காட்சியில் நடிக்க வைத்தார்.
அந்த ஒரு காட்சியில் நான் நடித்தவிதத்தில் என்னுடைய திரையுலக கேரியர் மிக வேகமாகத் துவங்கியது. இந்த விதத்தில் எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவர் வடிவேலுதான். அவரை நான் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்..” என்று உருக்கத்துடன் சொல்லியிருக்கிறார் ‘பாவா’ லட்சுமணன்.