‘அண்ணாத்த’ படத்தில் வில்லன்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகரான அபிமன்யூ சிங் நடித்துள்ளார் என்று அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது என்று சொல்லலாம். இந்த நிலையில் இப்போதுதான் அந்தப் படத்தின் வில்லன் கேரக்டரையே தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் படத்தில் மொத்தம் 3 வில்லன்கள் என்கிறார்கள். இவர்களில் ஒருவராக அபிமன்யூ சிங் நடிக்கிறார்.
சூர்யா நாயகனாக நடித்து ராம்கோபால் வர்மா இயக்கிய ‘ரத்த சரித்திரம்’ திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த புக்கா ரெட்டி என்ற கேரக்டரினால்தான் அதிகமாக இவர் பேசப்பட்டார்.
இந்த அபிமன்யூ சிங் தமிழில் இதற்கு முன்பாக ‘வேலாயுதம்’, ‘தலைவா’, ’10 எண்றதுக்குள்ள’, ‘தாளம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது நேரடியாக ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் மோதுகிறார் அபிமன்யூ சிங்.