விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பாகத்தில் நடிகர் ஆரி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 100 நாட்களையும் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
இறுதிப் போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சாம், ரம்யா ஐவரும் தகுதியானவர்களாக இருந்தனர்.
இன்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியின் துவக்கத்தில் சாமும், ரம்யா பாண்டியனும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் ஆரி, பாலாஜி, ரியோ மூவரும் மட்டும் களத்தில் இருந்தனர். இவர்களில் ரியோ கடைசி நேரத்தில் மூன்றாவது வெற்றியாளர் என்ற அடையாளத்தோடு வெளியேற்றப்பட்டார்.
இறுதியாக இருந்த ஆரி, பாலாஜி இருவரில் ஆரியே மிக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

ஆரி பெற்ற வாக்குகள் இதுவரையிலும் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் வென்றவர்கள் பெற்ற வாக்குகளைவிடவும் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது.
நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்ற ஆரிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இடையிடையே நடனம், மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து நடிகர் கமல்ஹாசன் தனது காலில் ஏற்பட்டுள்ள வலிக்காக சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக நாளை திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகே அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.