Friday, April 12, 2024

“ஆக்சனா, காமெடியான்னு என்னை எல்லாரும் குழப்புறாங்க?” – சந்தானத்தின் பரிதவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஜான்சனின் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’  என்ற திரைப்படம் பிப்ரவரி 12-ம்தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசும்போது, “கொரோனா நேரத்தில்தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம்; அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார்தான் காரணம்.

எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ‘ஏ-1’ படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில்தான் இயக்குநர் ஜான்சனுடன் பணி புரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது. அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து நம்மளிடம் காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர் ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்.

இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர்  ஜான்சன். நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதி செய்தார்.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார்தான். ‘ஏ-1’ படத்தின் ஹிட்டுக்கு அவரும் ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே கானா பாடல்கள்தான். ரொம்பவே ரசித்து இசையமைத்திருக்கிறார். அவருடைய உழைப்புக்கு மிகப் பெரிய நன்றி. கலை இயக்குநர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர் என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். அப்போது வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்கள்தான் கானா பாட்டுக்கள் மிகவும் பிரபலம். அங்குதான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போதுதான் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு வைத்தோம்.

கானா பாடகரைச் சுற்றியே கதை என்பதால், அந்தப் பாடல்களுடன் அமைத்தால் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும். கானா பாட்டு பாடுபவர் கவிதை நடையுடன் பாடினால் அந்தக் கதாபாத்திரம் ஒட்டாது என்பதுதான் காரணம். கானா என்பதே காக்டெய்ல் மாதிரிதான். அனைத்து மொழி வார்த்தைகளும் மிக்ஸ் செய்ததுதான். அதற்கு தமிழில் அர்த்தம் சொல்ல முடியாது.

மக்கள் மத்தியில் ஒரு கூட்டணி ஹிட்டாகிவிட்டால், அடுத்து படம் பண்ணும்போது எளிதாக இருக்கும். அதனால்தான் ‘ஏ-1’ படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேசு உள்ளிட்டோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்தி உள்ளோம்.

ஆக்‌ஷன் படங்களில் நடித்தால், “ஏன் ஆக்‌ஷன் படம்.. காமெடி படம் பண்ணுங்கள்..?” என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் “ஏன் ஆக்‌ஷன் படம் பண்ணுவதில்லை..?” என்கிறார்கள். இப்படி பல பேர் குழப்புவதால்தான் சில சமயங்களில் அடுத்து ஆக்‌ஷன் படம் பண்ணலாமா என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறேன். அதை சரியாக செய்வோம் என்று எண்ணியுள்ளேன்…” என்று பேசினார்.

- Advertisement -

Read more

Local News