சின்னத்திரை தொடர்கள் என்றாலே மாந்திரீகம், பரிகாரம் என்றுதான் இருக்கும். ஆனால் தற்போது சன் தொலைக்காட்சியில், டிசம்பர் ஐந்தாம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது.
சின்னத்திரையில் பிரபலமான ஆல்யா மானசா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தொடர் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
ஒரு காட்சியில், கோயிலுக்குச் சென்ற நடிகை பிரவீனா, தேங்காயை உடைக்காமல் வீட்டுக்கு கொண்டு செல்லத் தயங்குவார். அப்போது ஆட்டோவின் கண்ணாடியில் பெரியார் ஈ.வே.ரா.வின் புகைப்படம் ஒட்டியிருக்கும். உடனே பெரியாரின் புகைப்படத்துக்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றுவார்.
மேலும், “பொம்பளைங்க அடுப்படியை விட்டு வெளிய வரனும்னு சொல்லியிருக்கீங்களாமே, இனிமேலாவது, நான் உங்களப் படிக்குறேன். உங்களப் படிச்சிருந்தா என் வாழ்க்கை அடுப்படியிலயே போயிருக்காதோ என்னவோ? என்கிறார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் வெளியே வந்து, ‘கடவுளே இல்லனு சொன்னவருக்கு, தேங்காய் உடைக்குறியேமா, விட்டா கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வீங்க போல’ என்கிறார்.
அதற்கு, ‘சாமிய இவருக்கு புடிக்காம போயிருக்கலாம். ஆனா சாமிக்கு இவர புடிச்சிருக்கே. அதனாலதான் 94 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு போயிருக்காரு. எல்லாரும் சாமிதான்’ என்று சொல்கிறார்.
இந்தக் காட்சிதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘சின்னத்திரை தொடரில், புரட்சிகர காட்சிகளா’ என ரசிகர்கள் வியக்கின்றனர்.