நடிகர் சூரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் ரஜினியுடன் இவர் நடிக்கும் முதல் படமாகும்.
இந்தப் படத்தில் நடித்தபோது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் தனது பிறந்த நாளான இன்றைக்கு அளித்த ஒரு ஸ்பெஷல் பேட்டியில் சொல்லியிருக்கிறா்.
ரஜினி பற்றி நடிகர் சூரி அளித்த பேட்டியில், “அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு புறப்பட்டதில் இருந்தே உற்சாகம் தொற்றிக் கொண்டது. வீட்டில் இருந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
ஓட்டலுக்கு சென்றால் அங்கே சாருக்கும் அடுத்த அறையில் நான். சந்தோஷத்தில் பறக்கவே தொடங்கினேன். படப்பிடிப்புக்கு நான் சென்றபோதே அவர் தயாராக இருந்தார். ஒரு ரசிகனாக அவரை பார்க்க காத்திருந்தேன். அவரை சந்தித்தபோது இது கனவா என்று கிள்ளிக் கொண்டேன். “ஓ.. சூரி எப்படி இருக்கீங்க…?” என்று வாஞ்சையோடு கேட்டார். “சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்” என்று சொல்லிவிட்டு அந்த படங்களை நினைவுபடுத்தி சொன்னார்.
அதன் பிறகு செட்டில் நான் தயங்கி நின்றாலும் இடைவெளிகளில் அழைத்து அருகில் அமர வைத்து உரையாடி கூச்சம் போக்கினார். அவர் பேச, பேச சிறுவயதில் அவர் படங்களை பார்க்கப் பட்ட பாடுகள்தான் நினைவுக்கு வரும்.
‘தளபதி’ படத்தின்போது அந்த ஸ்டில்களை புது சட்டைகளில் வைத்து அயர்ன் பண்ணி ஒட்டி அணிந்து கொண்டு படத்துக்கு போனது. அதற்காக வீட்டில் வாங்கிய அடிகள் இதெல்லாம் நினைவுக்கு வரும். அவர் சினிமாவில் வரும்போது தொண்டை வலிக்கும் அளவுக்கு கத்தியிருக்கிறேன்.
ஒரு மிக பெரிய இயக்குநர், தலை சிறந்த சூப்பர் ஸ்டார் என ‘அண்ணாத்த’ படமே என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பிரமிப்பு எல்லாம் அவர் பழகிய விதத்தில் போயே விடுகிறது. அப்படி ஒரு டவுன் டூ எர்த் மனிதராக பழகுகிறார். அதுதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது விமானத்தில் அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை எனக்கு. அவரே அப்படி போட சொல்லி இருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டபோது விமானத்துக்கு மேலேயே நான் பறந்துதான் வந்தேன்.
அந்தப் பயணத்தின்போது என்னிடம், “நான் உங்களுக்கு கம்ஃபர்டிபிளாக இருந்தேனா…?” என்று கேட்டார். நான் அசந்துபோனேன். “நான் சினிமாவுக்கு வந்த பலனையே அடைந்துவிட்டேன். கடவுளையே பார்த்ததுபோல் இருக்கிறது” என்றேன். எனக்கு வாழ்த்து சொன்னார் ரஜினி ஸார்.