Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் திடீரென்று நேற்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருப்பது திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தளபதி என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்.. வருகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நேரடி அரசியல் வருகை பற்றி விஜய் இதுவரையிலும் எதுவும் பேசியதில்லை.

அதோடு தனது ரசிகர் மன்றத்தின் பெயரையும் விஜய் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றி, மக்களுக்கான உதவிகளை பல நேரங்களில் செய்ய வைத்திருக்கிறார் விஜய்.

தன்னுடைய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் மட்டுமே அரசியல் தொடர்பான கருத்துக்களை பட்டும், படாமல் சொல்லிவிட்டு தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுப் போவது அவரது வழக்கம்.

ஆனால், அவரது தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் “விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான சூழல் அமையும்போது அவர் நிச்சயமாக வருவார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட இதைத்தான் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையில் நேற்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு நடத்தியிருக்கிறார்.

மதுரை, திருச்சி, குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று விஜய் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு பற்றிய புகைப்படங்களை அந்த நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டபோதுதான் இந்தச் சந்திப்பு பற்றிய விவரமே தெரிய வந்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தியதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் 2 நாட்களுக்கு முன்பாகத்தான் “விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புண்டு…” என்று சொல்லியிருந்த சூழலில் இந்தச் சந்திப்பு நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு பக்கம் ரஜினி அரசியல் கட்சியைத் துவக்குகிறார்.. வரும் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் வரும்வேளையில் விஜய் முந்திக் கொண்டு வந்துவிடுவாரா.. அல்லது ரஜினி பாணியில் ‘நானும் வருவேன்’ என்று சொல்லியே நாட்களைக் கடத்துவாரா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News