தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் பிரபல இயக்குநரும், இசையமைப்பாளரும், நடிகரும், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அடுத்த மாதம் நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நாளை முதல் வழங்கப்படவுள்ள நிலையில் இத்தேர்தலில் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
“மன்னன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் மன்னன், செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். எங்களது அணியில் இடம் பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இது பற்றி தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்தான் என்னுடைய தாய் வீடு. ஆகவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தற்போது அறிவிக்கப்ப்டடுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். என்னுடன் நண்பர் மன்னனும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்..
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக முடிக் கிடக்கும் திரையரங்குகளை 50 சதவிதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படவுள்ள இந்தச் சூழலில், திரையரங்கு டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 12% GST வரியை மத்திய அரசு ரத்து செய்து தண்ணீர் இல்லாத தாமரை போல் வாடும் இந்திய திரையுலகை வாழ வைக்க வேண்டும்.
அதேபோல், தமிழகத்தில் வசூலிக்கப்படும் 8% உள்ளாட்சி கேளிக்கை (LBT) வரியை தமிழக அரசும் ரத்து செய்ய வேண்டும்.
உலகம் முழுவதும் VPF (Virtual Print Fee) கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் இந்தக் கட்டணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டணமும் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும்…” என்றும் டி.ராஜேந்தர் கோரிக்கை வைத்துள்ளார்.