Touring Talkies
100% Cinema

Sunday, March 16, 2025

Touring Talkies

சிவாஜியின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் நடிப்பிலே  இமயம் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். நடிப்பை பொறுத்தவரை அவர் ஒரு பல்கலைசாலை. அப்படிப்பட்ட சிவாஜி அவர்களின்  நடிப்பு சரியில்லை  என்று அவர் பார்த்து வளர்ந்த ஒரு இயக்குனர் சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் சிவாஜி வாழ்க்கையில் நடைபெற்றது.அந்த இயக்குனரின் பெயர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

சிவாஜி கணேசன் பத்மினி இருவரும் ஜோடியாக நடிக்க “பேசும் தெய்வம்” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் கே. எஸ். கோபாலகிருஷ்ணன். அந்தப்படத்தின் பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. அன்றுதான் கடைசீ நாள் படப்பிடிப்பு.

சிவாஜி நடித்துக் கொண்டிருந்த காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன்,சிவாஜி  நடித்து முடித்தவுடன் “ஒன் மோர்” என்றார்.

அவர் அப்படி சொன்னவுடன் சிவாஜி திரும்பவும் அந்தக் காட்சியில்  நடித்தார்.

மீண்டும் “ஒன் மோர்” என்றார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

சிறு முக சுளிப்பு கூட இல்லாமல் மிண்டும் நடித்தார் சிவாஜி.

அதிலும் திருப்தி ஏற்படாமல் மீண்டும் “ஒன் மோர்” என்றார் கே. எஸ். ஜி.

இப்படி ஒரு முறை அல்ல இரு முறை அல்ல ஆறு முறை சொன்னார் கே. எஸ். ஜி.  

சிவாஜியைப் பொறுத்தவரையில் எந்த காட்சியானாலும் அதை அப்படியே உள் வாங்கிக் கொண்டு முதல் டேக்கிலேயே அற்புதமாக நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். அது தமிழ் சினிமா உலகம் முழுவதும அறிந்த ஒரு விஷயம். அப்படிப்பட்ட சிவாஜி அவர்கள் நடித்ததில் திருப்தி ஏற்படாமல் ஆறு முறை கே. எஸ். ஜி. “ஒன் மோர்” கேட்டபோது அடுத்து அங்கே விபரீதமாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று மொத்த செட்டும் எதிர்பார்த்தது  

ஆறாவது முறையாக கே. எஸ், ஜி. “ஒன் மோர்” என்றதும் அவர்  அருகில் வந்த  சிவாஜி “நீங்க சொன்ன காட்சியில் எனக்குத் தெரிஞ்ச மாதிரி எல்லாம் நான் நடித்துவிட்டேன். அதை யெல்லாம் மீறி நீங்க என்ன எதிர்பர்க்கறீங்கன்னு எனக்குப் புரியலே அதனால நான் எப்படி நடிக்கணும்னு நீங்க கொஞ்சம்  நடிச்சுக் காட்டிடுங்க ’ என்றார்

அவர் அப்படி சொன்னவுடன் “என்ன அண்ணே விளையாடறீங்களா? உங்களுக்கு நான் நடிச்சிக்காட்டறதா?” என்றுதான்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சொல்லுவார்  என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்

ஆனால் அவர்கள் எல்லோரது எதிர்பார்ப்பிற்கும் மாறாக சிவாஜி அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டினார் கே.எஸ். ஜி.
 கே.எஸ்.ஜி. நடிப்தை  அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி கே. எஸ். ஜி நடித்து முடித்தவுடன் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  காரில் ஏறி கிளம்பி வீட்டுக்குப்  போய்விட்டார்.

சிவாஜியை பொறுத்தவரை அதுவரை எந்த படப்பிடிப்பிலும் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லோருமே  அதிர்ச்சி அடைந்தனர்.

சிவாஜி படப்பிடிப்பிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி தெரிந்ததும் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன் அலறியடித்துக்கொண்டு செட்டுக்கு ஒடி வந்தார்  

“என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க? சிவாஜி நமக்குத் தந்திருந்த கால்ஷிட் இன்னியோட முடியுது.  நாளை முதல்  அவர்  வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அந்த படத்துக்கு போனாரென்றால் இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரைப்  பிடிக்கவே முடியாது.அப்படி இருக்கும்போது ஏதாவது பேசி அவரை சமாதானப்படுத்தி காட்சியை எடுக்கறதை விட்டுட்டு இப்படி செஞ்சிட்டீங்களே! சிவாஜி யாரு? நடிப்புக்கே அவர்தான் அத்தாரிட்டி என்று உலகமே அவரைப் புகழுது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா?

இப்ப அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படம்  நிக்கப்போவுது. இனிமே யாரு சிவாஜிகிட்ட பேசி அவரை சமாதானப்படுத்தி சூட்டிங்கிற்கு கூப்பிட்டு வர்றது” என்று கோபாலகிருஷ்ணனிடம் கொஞ்சம் கோபமாகவே கேள்வி கேட்ட சபரிநாதன் “அவ்வளவுதான், இனி இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது” என்று அலுத்துக்கொண்டபடியே செட்டைவிட்டு  வெளியேறினார்

அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தனது  அலுவலகத்திற்கு வந்த கே.எஸ். ஜி க்கு ஒரே குழப்பம்!

காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டினேன். அது தப்பா? சிவாஜிக்கு  நடித்துக் காட்டியிருக்கக் கூடாதோ என்றெல்லாம் தன்  மனதுக்குள்ளேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்தார் அவர்.

சிவாஜி அடுத்த படப்பிடிப்பிற்கு போய்விட்டார் என்றால் இந்தப் படம் முடிய குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று தம்பி சபரி பயமுறுத்தியது அவர் மனதை இன்னும் அதிகமாகக்  குடைந்தது 

இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!

சரியாக மாலை 7 மணிக்கு சிவாஜி வீட்டிலிருந்து கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு ஒரு போன் அழைப்பு வந்தது!

“அண்ணன் நாளைக்கு  காலையில் 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். அடுத்த சூட்டிங்கிற்கு  பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாராம்.! இந்தத் தகவலை டைரக்டருக்கு  சொல்லிடுங்க” என்றார் போனில் பேசியவர்

போனில் வந்த அந்த தகவலுக்குப் பிறகுதான்  கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் உயிரே வந்தது

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கே  படப்பிடிப்பு தளம்  பரபரப்பானது!
சரியாக 7 மணிக்கு  மேக்கப் போட்டுக் கொண்டு  அந்த காட்சிக்குத் தேவையான உடைகளோடு தயாராக வந்தார் சிவாஜி.

கே. எஸ். ஜி. “ஸ்டார்ட் ஆக்ஷன்” என்று சொன்னவுடன்  சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்.

முதல் நாள் படப்பிடிப்பில் சிவாஜி நடிப்பில் திருப்தி ஏற்படாமல்  “ஒன் மோர், ஒன்  மோர்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த  இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அன்று சிவாஜி நடித்ததைப் பார்த்து மெய்மறந்து அப்படியே  சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார்!

“இதைத்தானே உங்ககிட்ட நான்  எதிர்பார்த்தேன். இதை நேத்து கொடுக்கமாட்டேன்னுட்டீங்களே” என்றார் கே. எஸ். ஜி.

“இயக்குனரே!  நேத்து நீங்க நடிச்சிக் காட்டினதுக்கு அப்புறம் யார் கிட்டேயும் ஒரு வார்த்தை கூட பேசாம நான் போனவுடனே நீங்க  எல்லோரும் நான்  கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு  நினைச்சிருப்பீங்க.

நான்  கோவிச்சிக்கிட்டு போகலே. ஆனா குழப்பத்தோட போனேன். அப்படி குழப்பத்தோட நான் போனதற்குக் காரணம் என்ன தெரியமா?

நீங்க நடிச்சிக் காட்டினதுதான்.

நீங்க நடிச்சிக் காட்டினதைப் பார்த்ததுக்கு அப்புறம் இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் நடித்த மாதிரி நம்மளால ஏன் நடிக்க முடியலைன்னு நான் ரொம்பவே குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டில்  கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல தடவை  நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். என் பெண்டாட்டி கமலா கூட `ஏங்க இது என்ன உங்களுக்கு  முதல் படமா என்ன ? ஏன் இப்படி திரும்பத் திரும்ப நடிச்சி பார்த்துக்கறீங்க?’  என்று கேட்டார்.  அதற்குப் பிறகு  எனக்கே என் நடிப்பில் திருப்தி ஏற்பட்டதும்தான் நான் படுக்கப்  போனேன்” என்று சிவாஜி சொன்னவுடன்  இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்கள் குளமாயின

இப்படியும் ஒரு நடிகனா என்று ஆச்சர்யப்பட்டுப் போனார் அவர்

அந்தப் படப்பிடிப்பிலே இருந்த அனைவரும்  இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போய் நின்றனர்.

என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன் நடிகர்திலகம்தான். ஏறக்குறைய கே எஸ் கோபாலகிருஷ்ணனின் “பேசும் தெய்வம்” படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்றது போன்ற ஒரு  சம்பவம்  ”வாழ்க்கை” படத்திலும்  நடந்தது

”வாழ்க்கை” படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது?” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.

நான் கிளம்புகின்ற நேரத்தில்  “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.

அப்போது அவ்வளவாக விவரம் இல்லாத ஒருவனாக  நான் இருந்தேன்  என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “ சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் உங்க நடிப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அந்தக் காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.  அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?

”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.

242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கும்  கலைச்சக்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொன்னேன்.

எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!

“எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.

நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..

அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.

இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.

சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான  மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும் .

இன்னும் ஒரு ஐம்பது வருடத்திற்குப் பிறகு இன்றுள்ள நடசத்திரங்கள் பற்றி இப்படி ஒரு சம்பவத்தை  யாராலாவது பகிர்ந்து கொள்ள முடியமா? அப்படி ஒரு மனப்பக்குவத்தில் இன்றுள்ள நடிகர்களும் இயக்குனர்களும் இருக்கிறார்களா என்ற கேள்வி பதில் இல்லாத கேள்வி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்விர்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

Read more

Local News