தமிழில் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டி என் ஏ’. இதில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, கே பி, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க’ சிவக்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன, தற்போது பிந்தைய பணிகள் நடந்து வருகின்றன. படத்தைப் பற்றி இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறும் போதெல்லாம், “திவ்யா, ஆனந்த் என்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் உளவியல் மற்றும் வாழ்வியல் தான் இப்படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. திவ்யாவாக நிமிஷா மற்றும் ஆனந்தாவாக அதர்வா நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பல காரணங்களால் தினமும் சமூகத்தினரால் மன அழுத்தம் ஏற்படும் நிலைகளில் உள்ளனர். காயமடைந்த இந்த இரண்டு உயிர்களும் ஒரு உணர்வுப்பூர்வமான தருணத்தில் சந்திக்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதை.
பேமிலி என்டர்டெய்ன்மென்ட் என உருவாகியுள்ள இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் நான் முதன்முறையாக பணியாற்றியிருக்கிறேன். படத்தின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசையும் தனித்துவமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது. அதனால் இந்த படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் என நம்புகிறேன். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.