சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்வுகள் பரவலாக நடத்தப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டார். அங்கு சூர்யா ரசிகர்கள் திரளாக கூடினர்.எனினும், இவ்வளவு பெரும் கூட்டத்தை எதிர்பார்க்காத சூர்யா, “இது என்ன? இத்தனை பேர் வந்திருக்கிறீர்களா? இதைப் பல ஆண்டுகளாக மறக்க முடியாது. நான் அறிந்தவாறு, அன்பே கடவுள்; இதுவே அந்த அன்பு. நீங்களே என் கடவுள். இந்த வரவேற்பை நான் ஒரு அருட்கொடை என்று நினைக்கிறேன். 2.5 ஆண்டுகளுக்குப் பின்பு கங்குவா வெளியாவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் நெருப்பு போலவே தீவிரமாக இருக்கும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய சூர்யா, “எனது தம்பி துல்கர் நடிப்பில் வெளியாகியுள்ள லக்கி பாஸ்கர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதாகக் கேட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் அந்த படத்தையும் பார்க்கும்படி கேட்டு கொள்கிறேன்,” என்றார். மேலும், நிகழ்ச்சியின் போது, சூர்யா தனது வாரணம் ஆயிரம் படத்தின் புகழ்பெற்ற அஞ்சல பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். துல்கர் சல்மான் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி வெளியான லக்கி பாஸ்கர் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.