ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவகி இருக்கும் படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, “யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களான ‘நல்ல நாள்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘கும்கி’ போன்ற படங்கள் போன்று ‘கள்வன்’ திரைப்படமும் வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.
அதன் பிறகு பேசவந்த இயக்குநர் வெற்றிமாறன் “யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால்தான் படம் ஓடும்” என்று குறிப்பிட்டார்.
இவர்கள் இருவரும் பேசிய அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து “பிற்போக்கு தனமாகவும், மூடநம்பிக்கையாகவும் கருத்து தெரிவித்த இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் மேடையில் வைத்தே தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.