நாயகன், ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார்.
ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக நாயகனை நம்ப வைத்துக்கொண்டு உள்ளனர். நாயகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். அப்படி பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள்.
நாயகனுக்கு ஏன் அப்படி ஆனது… இறுதியில் குணம் ஆனாரா என்பதே கதை.
நாயகனாக ஜெய். தானே கற்பனை செய்துகொண்டு குழப்பத்துடன் வாழும் கதாபாத்திரம். இதை உணர்ந்து நடித்து உள்ளார்.
நிஜத்தில் நடக்கும் சம்பவங்களைக்கூட, குடும்பத்தினர், கற்பனை என்று சொல்லி அவரை நம்ப வைப்பதும் நடக்கிறது. அப்போதெல்லாம் அவரது தடுமாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது நிலையை உணர்ந்து, அவர் அதிர்ச்சியாகும்போதும் சிறப்பாக நடித்து உள்ளார்.
ஜெய் மனைவியாக வரும் நாயகி அக்ஷயா கந்தமுதன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கணவரிடன் காண்பிக்கும் அன்பு, அவரிடம் பொய் சொல்ல வேண்டிய சூழலில் வெளிப்படுத்தும் தர்மசங்கடம் என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுகிறார்.
ஜெய்யின் தங்கை, அப்பா என புதுமுகங்களாக இருந்தாலும் தேர்ந்த நடிப்பு.
பால் பாண்டியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
சதீஷ்குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன.
ஜெய்க்கு உள்ள வித்தியாசமான நோய்… தவிர அவரைச் சுற்றி நடக்கும் நாடகம் என ஆரம்பம் முதலே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரன்.
இடைவேளைக்குப் பிறகு மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. ஆனாலும், சுவாரஸ்யம் குறையவில்லை.
குறைவான பட்ஜெட்டில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை அளித்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர்களே.