நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் கடன்தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன்தொகையை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது, உயர்நீதிமன்றம். மேலும் தொகையை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களைத் திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்து.
அடுத்த விசாரணையில் லைகா நிறுவனம் சார்பில் நடிகர் விஷால் இன்னும் ரூ. 15 கோடியை நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை என்றும், நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தந்துவருவதாகவும் குறிப்பிட்டு அவர் நடிப்பில் உருவாகி வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மார்க்ஆண்டனி’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென வாதிடப்பட்டது. பின்பு இந்த வழக்கு தொடர்பாக இன்று (12.09.2023) விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் மார்க் ஆண்டனி படத்தை வெளியிடவும் தடை விதித்து, விசாரணையை தள்ளி வைக்கப்பட்டது.
நீதிபதியை உத்தரவின்படி இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார் விஷால். கடந்த 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்ப உறவினர்களின் அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விஷாலிடம், வங்கி கணக்கில் முரண் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும் மார்க் ஆண்டனி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.