திரையுலகில் நடந்த பழைய சம்பவங்கள்.. நடக்கப்போகும் விசயங்கள் குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் விரிவாக பதில் அளித்து வருகிறார், இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன்.
இந்நிகழ்ச்சியில், “கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது” என்று ஒரு நேயர் கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன், “அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என நினைத்தேன். அது போன்ற சூழல்தான் நிலவியது. இப்போது பார்க்கும்போது, இன்னும் சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது” என்றார்.
மேலும் பழைய சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.
“பிரபல தயாரிப்பாளராக எல்.வி. பிரசாத், சிவாஜியை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார்.
தெலுங்கு படம் ஒன்றின் உரிமையை வாங்கினார். கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸை அந்த படத்தை பார்க்கச் சொன்னார்.
படம்பார்த்த ஆரூர்தாஸ், ‘இந்த படம் சரியில்லை. இதற்கு நான் வசனம் எழுத விரும்பவில்லை. இதே படத்தைத்தான் தமிழில் எடுப்பீர்கள் என்றால் வேறு யாரையாவது வசனம் எழுதச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.
அடுத்ததாக மராத்தி திரைப்படம் ஒன்றை காட்டினார் எல்.வி.பிரசாத். 13 ஆயிரம் அடி இருக்க வேண்டிய அந்த படமோ ஏகத்துக்கு வெட்டுப்பட்டு 9000 அடிதான் இருந்தது.
படம் முடிந்ததும் என்ன செய்யலாம் என எல்.வி.பிரசாத் கேட்டார்.
அதற்கு ஆரூர்தாஸ், “கவலைப்படாதீர்கள்.. படம் நன்றாக இருக்கிறது.. படம் ஓட ஓட.. இடையில் இல்லாத காட்சிகள் எல்லாம் என் மனதில் ஓடிவிட்டன. கிட்டதட்ட முழு திரைக்கதை தயார்’ என்றார்.
அதோடு, “இந்த படம், நாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. ஆகவே சிவாஜி வேண்டாம். புதிதாக வந்திருக்கும் ரவிச்சந்திரன், கே.ஆர். விஜயா ஆகியோரை நடிக்கவைக்கலாம் என்றார்.
எல்.வி.பிரசாத்துக்கும் இது சரி என தோன்றியது.
அப்படி உருவாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்தான் இதயக்கமலம்!
இது போன்ற பழைய, புதிய சினிமா செய்திகளை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..