தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் பியு சின்னப்பா. இவர் கடந்த 1936-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பிரித்விராஜன், மனோன்மணி, ஜகதல பிரதாபன், ரத்னகுமார், வனசுந்தரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக கடந்த 1951-ம் ஆண்டு வெளியான சுதர்சன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
20 வயதில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய பியு சின்னப்பா தனது 36-வது வயதில் 1951-ம் ஆண்டு சென்னையில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின் அவரது குடும்பத்தினர் வறுமையில் வாடிய நிலையில், அந்த குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பல உதவிகளை செய்துள்ளதாக பழம்பெரும் நடிகர் கலைஞானம் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரபல யு டியுப் சேனலான டூரிங் டாக்கீஸ் சேனலில் அவர் பேசியுள்ள ஒரு வீடியோ பதிவில், “1984-ல் மிருதங்க சக்ரவர்த்தி என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் நேரம். பியு சின்னப்பாவின் மகன் பூபதி ராஜா நடிக்க வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். எனக்கு தூக்கி வாரி போட்டது.
பியு சின்னப்பாவை நான் தேடி போன காலம்போய் இப்போது அவரது மகன் என்னை தேடி வந்திருக்கிறார். இதுதான் உலக வாழ்க்கை. அதன்பிறகு அவர் நடுத்தர வயதில் இறந்துவிட்டார்.
2019 ல் அவரது என்னை பார்க்க வந்தார். அவர், ரொம்ப கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார். உங்க தாத்தா வாங்கி வைத்த சொத்துக்கள் என்ன ஆச்சு என்று கேட்டபோது இருக்கும் அனைத்து சொத்துக்களையும் எங்கள் பாட்டி விற்றுவிட்டார் என்று கூறினார். அப்போது உங்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் நான் ரஜினியிடம் தான் சொல்ல வேண்டும் என்று சொன்னேன். அப்போது ஐயா நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதிலேயே ரஜினிகாந்த் 2 லட்சம் பணம் கொடுத்தார் என்று அவர் சொன்னார்.
பியூ சின்னப்பா வாழ்ந்த காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் பிறக்கவே இல்லை. அவரது படங்களையே பார்க்காதவர் பியு சின்னப்பா பேரன் வந்திருக்கிறார் என்றதும் பணம் கொடுத்து உதவி இருக்கிறார். அவர் என்னை சந்தித்து சென்ற அடுத்த வாரம் கொரோனா வந்துவிட்டது அதன்பிறகு சந்திக்கவில்லை” என கூறியுள்ளார் கலைஞானம்.
இந்த பேட்டி, பிரபல, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் ஒளிபரப்பாகி உள்ளது.