மேடை கச்சேரி ஒன்றில், இந்திப் பாடகி ஸ்ரேயா கோஷல், தவறாக பாடியதை கிண்டலடித்தார் இளையராஜா. இதை தற்போது ஜேம்ஸ் வசந்தன் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர், “15 வருடங்களுக்கு முன்பு இளையராஜா இசை கச்சேரி நடைபெற்றபோது நான் முன்வரிசையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஸ்ரேயா கோஷல், ‘காற்றில் எந்தன் கீதம்..’ பாடலை பாடினார்.
அந்த பாடலில், ‘தேடுதே//’ என்பதற்கு பதிலாக அவர் ‘தோடுதே..’ என்று பாடிவிட்டார். ரசிகர்கள் பலரும் இதை கேட்டு சிரிக்கிறார்கள். இதை பார்த்த ராஜா சாரும் தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்.
ஆனாலும் அடுத்து பாடும்போதும் ஸ்ரேயா கோஷல் அப்படியே பாடுகிறார். அப்போது ராஜா சார், ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. என்று மைக்கில் சொல்கிறார். இதை கேட்டு எல்லாரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள்.
எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை இது. ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காளி. இந்தி பாடலை பாடுபவர்.ஏன் அவரை கூட்டி வந்து தமிழில் பாட வைக்க வேண்டும். இங்கிருக்கும் ஜானகி, வாணி ஜெயராம், பி.சுசிலா ஆகியோரை விட அவர் சிறப்பாக பாடுவார் என்று தானே அழைத்து வந்தீங்க. அப்போ காணாத ஒன்றை தோடுதே என்று பாடினால் அது யாருடைய தவறு. அவர் தமிழ் பாடலை இந்தியில் எழுதி தான் பாடிக்கொண்டு இருக்கிறார். அதை நீங்கள் அப்போதே திருத்தியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, மேடையில் மொழித் தெரியாமல் பாடுபவர் தவறு செய்தால், அதை நீங்கள் தமிழில் கிண்டல் செய்யலாமா?
நீங்கள் சுட்டிக்காட்டுவது அவருக்கும் தெரிய வேண்டும் அல்லவா அதனால் ஆங்கிலத்தில் தவறை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் மொழி தெரியாத அவரை தமிழில் பேசி கிண்டல் செய்யும் அளவுக்கு அநாகரிக்கமாக நடந்துகொண்டார் இளையராஜா. இதனால் மக்கள் பலரின் மனதில் அவர் தரம் தாழ்ந்துவிட்டார்” என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.