உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா – ஸ்ருதிஹாசன் ஜோடியக நடித்த படம் ஏழாம் அறிவு. இதில் ஸ்ருதி, “இடஒதுக்கீட்டால் திறமையானவர்களின் வாய்ப்பு பறிபோகிறது” என்று இட ஒதுக்கீட்டை விமர்சித்து பேசும் காட்சி வரும். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘அந்த வரிகளை நான் எழுதவில்லை. ஸ்ருதியாக பேசிவிட்டார்.. நானும் விட்டுவிட்டேன்’ என்று சமாளித்தார். பிறகு அந்த காட்சி நீக்கப்பட்டது.
படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், குறிப்பிட்ட காட்சி குறித்து தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
“அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யா அங்கு இல்லை. டப்பிங்கின்போதும் அப்படி ஒரு வசனம் வருகிறது என்பது சூர்யாவுக்கு தெரியாது. படம் ரிலீசுக்கு முன்பாக படத்தை பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து, ‘அது தவறான கருத்து; அந்த வசனத்தை எடுத்துவிடுங்கள்’ என்றார்.
ஆனால் நான், ‘வசனம் தானே விட்டுடுங்க’ என்று சொன்னேன். அந்த சமயத்தில் என் அரசியல் புரிதல் அவ்வளவுதான். ஆனால் சூர்யாவுக்கு அப்போதே அரசியல் புரிதல் இருந்துள்ளது. இப்போது அதை யோசித்தால் சூர்யா சொன்னதை நான் அப்போதே செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார் உதயநிதி.