பொதுவாக சினிமாவில் ஒரு நடிகர் அல்லது நடிகை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை அடுத்தடுத்து படங்களில் நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ரெட் கார்டு கொடுப்பது. விஜய் முதல் சிம்பு வரை இந்த ரெட் கார்டு பிரச்சனையை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இந்த பிரச்சனை நடந்திருக்கிறது.
இது குறித்து பத்திரிகையாளர் மணி கூறும்போது, “1990களின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து ஒரு முடிவு எடுத்தன. அதன்படி, ‘படத் தயாரிப்பு செலவு அதிகரிக்க நடிகர்களின் சம்ம்பளம் ஒரு காரணம். ஆகவே ரஜினி உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்’ என்று தீர்மானம் இயற்றின.
இது குறித்து இச்சங்கங்களுடன் நடிகர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
குறிப்பாக ரஜினிகாந்த், ‘நடிகர்களின் மார்க்கெட் வேல்யூவை வைத்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. படச் செலவைக் குறைக்க வேறு பல வழிகள் இருக்கின்றன’ என்றார்.
இதையடுத்து விநியோகஸ்தர்கள் சங்கம், ‘இனி ரஜினியின் படத்தை வாங்கக்கூடாது’ என தீர்மானம் போட்டது.
அந்த நேரத்தில் – 1993 ஆம் ஆண்டு – விஜயா ப்ரொடக்சன்ஸ் ரஜினியை வைத்து ‘உழைப்பாளி’ திரைப்படத்தை எடுத்தது.
விநியோகஸ்தர்கள் சங்கம், இந்த படத்தை வாங்கவில்லை. ஆகவே, விஜயா புரடக்சன் நிறுவனமே நேரடியாக படத்தை வெளியிட்டது. சவுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு , செங்கல்பட்டு பகுதியில் ரஜினியே படத்தை விநியோகித்தார்.
இந்த படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் வேட்டையாடியது.
இதனால் விநியோகஸ்தர்கள், ரஜினி மீதான ரெட் கார்டை விலக்கிக் கொண்டார்கள்.
இப்படி தனக்கான எதிர்ப்புகளை திட்டமிட்டு முறியடித்தவர் ரஜினி” என்று மணி தெரிவித்தார்.