கிராமத்தில் விவசாய கூலி அண்ணா துரை. முதல் மனைவி இறந்துவிட இரண்டாவது திருமணம் செய்து வாழ்கிறார். முதல் மனைவிக்கு இரண்டு, இரண்டாவது மனைவிக்கு ஒன்று என மூன்று பிள்ளைகள்.
மிகுந்த வறுமை. இதில் அவசரத்துக்காக கடன் வாங்கி, வட்டிகூட கட்டமுடியாமல் திண்டாடுகிறார். வட்டிக்கரரிடம் தினமும் இவரும், குடும்பமும் அவமானப்பட்டு வருகிறது.
தவிர, மூத்த தாரத்து பிள்ளைகள் இருவரையும், இளையதாரம் கவனிப்பதே இல்லை. இரண்டு தரப்பையும் தூக்கிச் சுமக்க திண்டாடுகிறார் அண்ணாதுரை.
இந்த நிலையில், இரண்டாவது மனைவியுடன் கூலி வேலைக்கு வெளியூர் செல்கிறார் அண்ணாதுரை.
இன்னொரு பக்கம், அந்த மோதிரத்தை அடகு வைத்து, வட்டிக்காரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை புரட்டலாம் என அண்ணாதுரையும், அவரது மனைவியும் நினைத்து ஊருக்கு திரும்புகிறார்கள்.
இதற்கிடையே, அண்ணாதுரையின் மகன், வீட்டில் இருந்த மோதிரத்தை தொலைத்து விடுகிறான். சித்தி அடிக்கு பயந்து நடுங்குகிறான். அவன் அக்காவும் பயப்படுகிறார்கள்.
இதையடுத்து என்ன நடந்தது என்பதுதான் கதை.
அல்லாடும் அண்ணாதுரையாக கண் முன் நிற்கிறார் சார்லி. இளைய மனைவிக்குத் தெரியாமல், மூத்த தாரத்தின் பிள்ளைகளுக்கு புரோட்டா வாங்கிக்கொடுக்கும் காட்சியில்.. மகிழ்ச்சி, தவிப்பு, இயலாமை எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறார்.
வட்டிக்கடைக்காருக்கு பயந்து பணம் புரட்ட ஓடுவது.. அதே நேரம், வட்டிக்காரர் தரக்குறைவாக பேச ஆவேசமடைவது என அற்புத நடிப்பு.
அவரது மனைவியாக நடித்திருக்கும் சூசன் ராஜ், சிறப்பான நடிப்பு. மூத்தவளின் பிள்ளைகள் மீது கண்களிலேயே காட்டும் வெறுப்பு.. யப்பா!
அதே நேரம், எப்படியாவது கடனை அடைத்து கணவனின் – குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தவிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர்களின் மகளாக வரும் மோனிகா,
மகனாக வரும் மாஸ்டர் சக்தி ரித்விக்.. இருவருமே இயல்பான நடிப்பை எப்படித்தான் வெளிப்படுத்தினார்களோ!
நிஜ அண்ணன் – தங்கையைப் போலவே மனதில் பதிகிறார்கள்.
மூத்தவள் என்கிற இயல்பான அக்கறையுடன் தம்பியை வழிநடத்தும் மோனிகா. தன் அப்பாவி ஆசைகளை வெகுளியாய் அக்காவிடம் சொல்லும், மாஸ்டர் சக்தி ரித்விக்.. ஆஹா!
எந்த படத்திலும் கதாபாத்திரமாகவே மாறிவிடும், எம்.எஸ்.பாஸ்கர், இதில் கராறான கந்துவட்டிக்காரராக வருகிறார்.
சிறுவர்களின் பாட்டியாக வரும் அந்த முதிய பெண்மணி உள்ளிட்ட அனைவருமே நிஜ மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
விதிவிலக்கு, ஜார்ஜ் மட்டும்தான். சற்று மனநிலை மாறுபாடு கொண்டவராக வரும் இவர் மனதில் ஒட்டவில்லை.
காட்டுமன்னார்குடியை அத்தனை அழகாக விழுங்கி, நமக்கு அளித்திருக்கிறது கேமரா. ஒளிப்பதிவாளர் காளிதாஸுக்கு பாராட்டுகள்.
அதே போல இசை, எடிட்டிங் அனைத்துமே கட்சிதம்.
சுரேஷ் ஜி, மிகச் சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
அறிமுக ( புரோட்டா) காட்சியிலேயே.. கதை நாயகனின் குடும்ப சூழலை சிறப்பாக சொல்லிவிடுகிறார்.
காட்சிகள் பல நெகிழ வைக்கின்றன.
காரணம்.. இந்த கதை ஏற்படுத்தும் உணர்வு.. அந்த உணர்வை வெளிப்படும்படி காட்சி அமைத்த இயக்கம்… சிறப்பு.