கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு முறை மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் அப்போது சினிமாத்துறையில் ஜொலித்த பல நடிகர்கள் கலந்துகொண்டார்கள். அங்கே பலரும் கலைவாணரை கௌரவப்படுத்தும் வகையில் பல பொன்னாடைகளை அவருக்கு போர்த்தினார்கள்.
இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த எம்.ஆர்.ராதா, கீழே அமர்ந்திருந்தவர்களை பார்த்து, “இங்கே பல பேர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தினீர்கள். நானும் அதை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இந்த பொன்னாடைகள் என்.எஸ்.கிருஷ்ணனை மகிழ்ச்சி படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இன்றைய சூழ்நிலையில் அவர் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார். அதை நாம் அனைவருமே நன்கு அறிவோம்.
அந்த கஷ்டத்தில் இருந்து அவர் மீள வேண்டுமானால் அவர் ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும். அந்த படத்தில் நாம் அனைவரும் இலவசமாக நடிக்க வேண்டும். பொதுவாக நான் பணம் வாங்காமல் எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. ஆனால் நான் இப்போது சொல்கிறேன். என்.எஸ்.கிருஷ்ணன் படத்தில் நடிப்பதற்கு நான் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கப்போவதில்லை.
அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவுக்காக என்னுடைய பங்காக பத்தாயிரம் ரூபாயை இந்த மேடையிலேயே அவருக்கு அளிக்கிறேன்” என்று கூறி என்.எஸ்.கிருஷ்ணனிடம் அந்த மேடையிலேயே பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார்.
அவரது பெரிய மனதைக் கண்டு நெகிழ்ந்து போய்விட்டனர் கூட்டத்தினர்.