வார்த்தை வித்தகர், வாலிபக் கவிஞர் என்றெல்லாம் பெயர் எடுத்தவர் பாடலாசிரியர் வாலி. ஆனால் அவரையே டார்ச்சர் செய்துவிடுவாராம் இயக்குநர் பாக்யராஜ்.
இது குறித்து வாலியே ஒரு விழா மேடையில் கூறியிருக்கிறார்.
அவர், “ஒருமுறை பாக்கியராஜ் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘நானே என் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன். அதில் ஒரு பாடலை நீங்கள் எழுத வேண்டும்’ என அழைத்தார்.
அவரின் வீட்டுக்குச் சென்றேன். பத்து நாட்கள் சோறு, தண்ணி, உறக்கம், சரியாக இல்லாமால் ஆர்மோனிய பெட்டியை வாசித்து இசையை அவர் கற்று தேர்ந்திருந்தார் என்பது தெரிந்தது.பிரமித்தேன்.
ஆனால், எப்போதும் சிகரெட்டை ஊதிச் தள்ளுவார். அந்த புகையை நானும் வாங்க வேண்டியிருக்கும்.
தவிர பல்லவியை நான் எழுதி கொடுத்து, தூங்கி விழுந்து, எழுந்து, அவரின் மனைவி பூர்ணிமா எனக்கு டிபன் கொடுத்து நான் சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதன் பின்னரும் அவர் அந்த பல்லவியையே பார்த்துக்கொண்டிருப்பார். ஒரு முடிவுக்கே வரமாட்டார்.
‘இனிமேல் இவர் இசையில் பாடல்களே எழுதக்கூடாது’ என நான் நினைக்கும் நேரத்தில், என்னிடம் ஒரு கவரை தருவார். அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் நான் எப்படி எழுத மாட்டேன் என சொல்வேன். அதன் பிறகு அவர் இசையமைத்த ஆறு திரைப்படங்களில் பாட்டெழுதினேன்” என்று நகைச்சுவையாக பேசியிருந்தார் வாலி.