ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி உள்ளிட்டோரின் நடிப்பில் 1959 ஆம் வெளியான ‘கல்யாண பரிசு’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ‘பெல்லி கனுகா’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார் ஸ்ரீதர். நாகேஸ்வர ராவ் கதாநாயகனாக நடிக்க, சரோஜா தேவியே கதாநாயகியாக நடித்தார்.
படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு நாள், சரோஜா தேவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஒரு நாள் படப்பிடிப்பை தள்ளிவைக்கச் சென்னார். இயக்குனர் ஸ்ரீதர் ஒரு நாள் ஷூட்டிங்கை தள்ளிவைத்தார். அதன் பின் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது.
இந்நிலையில், ஸ்ரீதர் தனது கல்யாண பரிசு படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் ஈடுபட்டார்.
இதைக் கேள்விப்பட்ட சரோஜாதேவி, “இதிலும் என்னை நாயகியாக்குவதாக கூறியிருந்தீர்களே..” என ஆதங்கத்துடன் கேட்டார்.
அதற்கு ஸ்ரீதர், “நான் அப்படித்தான் முடிவெடுத்து இருந்தேன். ஆனால் ‘பெல்லி கனுகா’ படப்பிடிப்பின் இடையே ஒரு நாள், உடல் நிலை சரியில்லை என்று சொல்லி, படப்பிடிப்பை தள்ளி வைக்கச் சொன்னீர்கள். ஆனால் வேறு படத்தில் அன்று நடித்தீர்கள். உண்மையைச் சொல்லி இருந்தால் நான் ஒப்புக்கொண்டிருப்பேனே.. ஏன் பொய் சொன்னீர்கள்.. ஆகவேதான் அடுத்த படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்யும் முடிவை மாற்றிக்கொண்டேன்” என்றாராம்.
சமயோஜிதம் என நினைத்துச் சொல்லும் பொய், இப்படி சிக்கலை ஏற்படுத்திவிடுவதும் உண்டு என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.