இயக்குநர் மிஷ்கினுக்கு எதிராக பொங்கி, மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் விஷால்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் 2017-ல் வெளியான படம் துப்பறிவாளன். இதன் இரண்டாம் பாகம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் ஆரம்பமானது. ஆனால் இருவருக்குமான கருத்து வேறுபாட காரணமாக நின்றுபோனது.
படம் நின்று போனதற்கு மிஷ்கினே காரணம் என்று மீண்டும் குற்றஞ்சாட்டினார் விஷால்.
பதிலுக்கு மிஷ்கின், “என்னை வேசி மகன் என விஷால் திட்டினார். என் தாயை அவமானப்படுத்தினார். இதனால் ஆத்திரப்பட்டு கேட்ட என் தம்பியை விஷால் தாக்கினார்” என்று செய்தியாளர்களிடம் மேடையிலேயே பேசினார் மிஷ்கின். மேலும், “விஷால் ஒரு பொறுக்கி, பொறுக்கி, பொறுக்கி” என வசை பாடினார்.
இதன் வீடியோ காட்சி இன்னும் இணையத்தில் உலவுகிறது.
இந்நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட மிஷ்கின், “என்னுடன் நடிகர்களில் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்றால் அது விஷால் தான்” என்று பேசினார்.
தனது தாயை கடுமையாக பேசினார் என விஷாலை மேடை போட்டு திட்டிய மிஷ்கின், தற்போது அவரை மிக ஒழுக்கமானவர் என புகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘சரி.. இருவரும் சமாதானமாகி விட்டார்கள்’ என நினைத்துக்கொண்டு இருக்கும் போது, மீண்டும் பொங்கி எழுந்திருக்கிறார் விஷால்.
வரும் 22ம் தேதி வெளியாக இருக்கும் தனது லத்தி பட பிரமோஷனுக்காக கோவை வந்த விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மிஷ்கின் ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர். ஆனால் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அந்த துரோகத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் .இனி அவர் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று தான் கூறி வருகிறேன்” என்று காட்டமாக கூறினார்.
என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது!