எந்த வேடமாக இருந்தாலும் அப்படியே பொருந்திப் போகும் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தாலும், கேரக்டர் ரோல், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் ரசிகர்களை வியக்க வைப்பவர்.
அதே நேரம், கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து உள்ளார்.
அதில் ஒன்று, தைமாசம் பூவாசம். இதை அவரே தயாரித்தார்.
அந்தப் படத்தில், வயது முதிர்ந்த வாத்தியாராக நடித்தார். முடியை மழித்து பெரிய மீசை வைத்து அடையாளமே தெரியாமல் மாறி இருப்பார் அந்தப் படத்தில். ஏதோடு வழக்கம்போல அட்டகாசமான நடிப்பு.
இப்படத்தின் சிறப்பு காட்சியை, நடிகர் சங்கத்தில் அப்போது இருந்த திரையரங்கில் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டார். அதில் தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் அழைப்பு விடுக்க.. அவரும் கலந்துகொண்டார்.
படம் பார்த்து முடித்தவுடன் வெளியே வந்தார் கலைஞர். ராதாரவியும், படத்தில் மேக் அப் மேனாக பணிபுந்த கஜபதியும் நின்று கொண்டு இருந்தார்கள்.
கஜபதியைப் பார்த்த கலைஞர், “ஒப்பனை சிறப்பு” என பாராட்டினார். அருகில் இருந்த ராதாரவிக்கு, “எவ்வளவு சிரமப்பட்டு நடித்திருக்கிறோம்.. நம்மை பாராட்ட…” என்று நினைக்கும் அந்த விநாடியே, அவரைப் பார்த்து, “ஒங்கப்பனைவிட சிறப்பு” என சொல்லிவிட்டுச் சென்றார் கலைஞர்.
இந்த சம்பவத்தை சமீபத்தில் தெரிவித்த ராதாரவி, “கஜபதியை பாராட்டிய அதே விநாடி என்னையும் பாராட்டினார். அதுவும் கண நேரத்தில், ‘ஒப்பனை.. ஒங்கப்பனை..’ என அவருக்கு எப்படித்தான் தோன்றியதோ!” என பழைய சம்பவத்தை நெகிழ்ந்து கூறினார்.
அவர்தானே கலைஞர்!