நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய நடிகையாக 1960 -70களில் 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். கொஞ்சல் பேச்சுக்கு சொந்தக்காரர் கன்னட பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று பல பெயர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத நடிகையாக தமிழ், தெலுங்கு கன்னடம், என 50 ஆண்டுகள் கடந்து சினிமாவில் நிலைத்து நிற்கிறார். அவர் சினிமாவுக்கு வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை.
பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு நடந்த இசைப் போட்டியில் இவரும் கலந்து கொண்டு இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட நடிகரும் பட அதிபருமான ஹன்னப்ப பாகவதருக்கு சரோஜாதேவியின் குரல் பிடித்துவிட்டது. அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று குரல் வளத்திற்கான சோதனை நடத்தப்பட்டது. பிறகு அவருக்கு ஒரு யோசனை அவள் அழகாக இருக்கிறாள் நடிக்க வைத்து விடலாம் என்று தோன்றியது.
ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை அறிமுகம் செய்தார். 1955 ஆம் ஆண்டு வெளியான ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சரோஜாதேவி நடித்த முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு பட வாய்ப்பு அதிகரித்தது தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் சரோஜா தேவி. அவர் பள்ளியில் பாடிய அந்த ஒற்றை பாடல் அவரது வாழ்க்கையை மாற்றும் என்று அவர் அப்போது யோசித்திருக்க மாட்டார்.