இந்தப் படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
அதர்வா நாயகனாகவும், தான்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீதா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, ராகுல்தேவ் ஷெட்டி, அன்புதாசன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – ஜிப்ரான், சண்டை பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – ராஜேஷ், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், எழுத்து, இயக்கம் – சாம் ஆன்டன்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான அதர்வா கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கப் போன இடத்தில் மேலிட உத்தரவையும் மீறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதால் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
அதர்வாவின் திறமையை இழக்க விரும்பாத போலீஸ் கமிஷனர் அழகம்பெருமாள் அவரை போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குள்ளேயே உள்ளடி வேலை பார்க்கும் இன்டர்னல் சீக்ரெட் டீமில் ஒரு ஆளாக சேர்த்துவிடுகிறார். போலீஸ் துறைக்குள் இருக்கும் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு உயரதிகாரிகளுக்குப் போட்டுக் கொடுப்பதுதான் இந்த சீக்ரெட் கம்பெனியின் ரெகுலர் வேலை.
இந்த வேலையில் அதர்வாவுடன் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் ஆகியோரும் இருக்கின்றனர். லஞ்சம் வாங்குபவர்கள், பாலியல் தொழில் புரோக்கர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், மனித உரிமையை மீறுபவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் என்று பல போலீஸாரையும் இந்தக் கும்பல் மேலிடத்திற்குக் காட்டிக் கொடுக்க பலரும் சஸ்பெண்ட்டாகிறார்கள்.
இந்த நேரத்தில்தான் குழந்தை கடத்தல் சம்பவம் ஒன்று அதர்வாவின் கண் முன்னே நடக்கிறது. குழந்தையைக் காப்பாற்றப் போய் நேரடி தாக்குதலில் அதர்வா ஈடுபட அது துப்பாக்கி சண்டையில் போய் முடிகிறது. மேலும் இது தொடர்பாக விசாரிக்க, விசாரிக்க புதைகுழியில் பல பயங்கரங்கள் இருப்பது அதர்வாவுக்குத் தெரிய வருகிறது.
இந்தக் கடத்தல்காரர்களுக்கும், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தனது நினைவுகளை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரியான அதர்வாவின் அப்பா அருண் பாண்டியனுக்கும் இருக்கும் தொடர்பு கடைசியாக தெரிய வருகிறது.
அதர்வா இந்தக் கூட்டத்தை அடியோடு ஒழிக்க களத்தில் இறங்குகிறார். கடத்தல் கும்பலின் தலைவன் மைக்கேல் நேரடியாக அதர்வாவுடன் மோதுகிறான். கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள். இந்தக் குழந்தை கடத்தலின் மூலாதாரம் என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.
அதர்வாவுக்கு ஆக்ரோஷமான நடிப்புதான் மிக இயல்பாய் வருகிறது. அடிதடி, சண்டை காட்சிகளில் பராக்கிரமம் பொங்க அடித்து ஆடியிருக்கிறார். லேசாக காதல் வாடையையும் வீசுகிறார். ஆனால் அது கொஞ்சமே என்பதால் எந்தக் கெமிஸ்ட்ரியையும் யாருக்குள்ளும் உருவாக்கவில்லை.
நாயகியான தான்யா ரவிச்சந்திரனுக்கு மிகக் குறைந்த காட்சிகளே.. படத்தில் அவ்வப்போது திரைக்கதைக்கு தொடர்பு கொடுப்பதற்காகவே அவரது கேரக்டரை வைத்திருக்கிறார்கள் போலும்.
படத்தில் நமது கவனத்தை ஈர்த்திருப்பது வில்லனான ‘மைக்கேல்’ கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஷெட்டிதான். கொஞ்சம் ‘மாஸ்டர்’ பட விஜய் சேதுபதி, கொஞ்சம் ‘பகவதி’ பட ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோரின் கலவையாக காட்சியளிக்கிறார்.
இவர் கடத்தலுக்குப் போடும் திட்டங்கள் பலே என்றாலும் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் பயம் கொள்ள வைக்கவில்லை என்பதால் தமிழில் புது வில்லன் நடிகர்ப்பா என்ற பெருமையை மட்டும் தட்டிச் சென்றுள்ளார்.
அதர்வா டீமில் இருக்கும் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், அறந்தாங்கி நிஷா நால்வரும்கூட சீரியஸாகவே நடித்துள்ளனர். அதிலும் சின்னி ஜெயந்த் இரண்டு காட்சிகளில் மனதைத் தொடும் அளவுக்கு நடித்திருக்கிறார். கடைசியில் “என் மகனிடம் என்னைப் பற்றிச் சொல்லிவிடு…” என்று சொல்லிவிட்டு மரணத்துடன் மோதுவது டச்சிங்கானது.
அதர்வாவின் அப்பாவாக அருண் பாண்டியன். 1993-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் ரெக்கார்டு அறைக்கு தீ வைத்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தான் இன்னார் என்பதையே மறந்திருக்கும் அப்பாவி போலீஸ்காரர். அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால், இவரால்தான் படம் முடியப் போகிறது என்பதை மட்டும் முன்னமேயே ஊகிக்க முடிந்தது இயக்குநரின் தவறுதான்.
அலுவலக வேலையில் பாசத்தைப் பொழிய கமிஷனர் அழகம்பெருமாளும், வீட்டில் பாசத்தைக் காட்ட அம்மா சீதாவுமாக காட்சியளித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கிறது. இரவு நேரக் காட்சிகளையே பகல் நேரக் காட்சிகளாகவும் அமைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. பெரிய பட்ஜெட் படம். நிச்சயமாக பல வசதிகளை செய்து கொடுத்திருப்பார்கள். அப்படியிருந்தும் பகல் நேரக் காட்சிகளில் லைட்டே இல்லாததுபோல டிம்மாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தான்யாவை குளோஸப்பில் காட்டும்போது மேக்கப் கலைஞர் இல்லாமலேயே நடித்தாரோ என்ற சந்தேகமும் வருகிறது.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சண்டை பயிற்சி இயக்குநரின் திறமையைத்தான். திலீப் சுப்பராயனின் ஆக்ஷன் வெறியில் சிக்கி உழன்றிருக்கிறார் அதர்வா. ஆனால், அதற்காக உடலில் 2 குண்டுகளை வாங்கியும் தெம்பாக சண்டை போடுவதெல்லாம் டூ மச்சான விஷயம் இ்ல்லையா ஸார்..?
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் எதுவும் புரியவில்லை. இசையும் கேட்கும் ரகமாக இல்லாதது வருத்தத்திற்குரியது. பின்னணி இசையில் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளித்திருக்கிறார் ஜிப்ரான். படத் தொகுப்பாளர் ரூபன் காட்சிகளை நெருக்கமாகத் தொகுத்து திரைக்கதையை பரபரவென இருக்க வைக்க முயன்றிருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் வன்முறை சம்பவத்திற்கும், அருண் பாண்டியனுக்கும் இருக்கும் தொடர்பும், அந்தத் தொடர்பை வரவழைக்க வீட்டில் அருண் பாண்டியனின் அறையில் அந்தச் சம்பவம் தொடர்பான பேப்பர்களை தொங்க விட்டிருப்பதும், அதை கடைசியில் திரைக்கதைக்கு உதவுவதும் பிரில்லியண்ட் ஐடியாதான்.
ஆனால் அதற்காக போலீஸில் இல்லாத ஒரு டிபார்ட்மெண்ட்டான இன்டெர்னல் டிபார்ட்மெண்ட்டை இருப்பதாகக் காட்டி அதன் மூலமாக அதர்வாவை போலீஸுடன் தொடர்புபடுத்தி வைத்திருப்பது பெரும் சறுக்கல்தான். அதற்குப் பதிலாக சஸ்பெண்ட்டில் இருந்தபடியே அவர் செய்வதுபோல திரைக்கதையை வைத்திருந்தால்கூட அது நம்பகமாக இருந்திருக்கும்.
அன்புதாசன் ஹோட்டலில் தன் அறையிலேயே ஒட்டு மொத்த சிட்டியையும் கன்ட்ரோல் செய்வதும், கண்காண்பிப்பதும் கொஞ்சமாவது பொறுத்தமாக இருக்கிறதா இயக்குநரே.? அதிலும் கன்டெய்னர் லாரியையே ஹேக் செய்வதெல்லாம் காமெடி ஸாரே..!
இதுவரையிலும் சொல்லப்படாத குழந்தைகள் தத்தெடுத்தலின் பின்னால் இருக்கும் மறைமுக கடத்தல் விஷயம் ஒன்றுக்காக மட்டுமே இயக்குநரை நாம் பாராட்டியாக வேண்டும். மற்றபடி அதர்வாவுக்கு எப்படியோ… தமிழ்ச் சினிமாவுக்கு சுமாரான ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இது வந்திருக்கிறது.
RATING : 3 / 5