‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களையும், ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.
இந்த விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், ”இமைக்கா நொடிகள்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, “விக்ரம் கால்ஷீட் இருக்கு. அவருக்கு படம் பண்ண முடியுமா..?” என்று கேட்டார்.
எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை.. நான் கடக்க வேண்டிய உயரத்தை.. அவர்தான் நிர்ணயித்தார். அப்போது அவர் ஒரு விசயத்தை சொன்னார். அதனை என்னுடைய பெற்றோர்கள்கூட சொல்லி இருக்க மாட்டார்கள். செய்திருக்க மாட்டார்கள்.
அதாவது என்னுடைய பெற்றோர்களே படத்தை தயாரித்திருந்தாலும் இந்த அளவிற்கு செலவழித்திருக்க மாட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த ‘கோப்ரா’வை உருவாக்கி இருக்கிறார்.
அப்புறம் ஒரு நாள், “இசைக்கு ரஹ்மானை கேட்கலாமா?” என்று கேட்டார். அவர் என்னை ஏதோ ‘பிராங்க் பண்ணுகிறார்’ என்று எண்ணி, நானும் “சரி”யென்றேன். சில தினங்கள் கழித்து “ரகுமானை பார்த்து கதையை சொல்லுங்க..” என்றார்.
எனக்கோ ரஹ்மானை சந்தித்து அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்தது. கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
ரஹ்மானை அவரது வீட்டில் சந்தித்தபோது “கதை சொல்ல தயாரா?” என்றார். “நான் முதலில் உங்களுடன் போட்டோ எடுத்துக்கணும்… எடுத்துக் கொள்ளலாமா?” எனக் கேட்டேன். பிறகுதான் கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. உடனேயே இசையமைக்க ஒப்புக் கொண்டார்.
ஐந்து பாடல்களை இந்த ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார் ரஹ்மான். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. அவரின் பேரன்பை கண்டு வியந்திருக்கிறேன். பின்னணி இசையில் நீங்கள் நிகழ்த்த இருக்கும் மாய ஜால தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.
இர்ஃபான் பதானை சந்தித்து கதையை சொன்னபோது, “என்னால் நடிக்க முடியுமா?” எனக் கேட்டார். “உங்களால் முடியும்..” என்று நம்பிக்கை அளித்தேன். அத்துடன் அவருக்காக தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பை தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார்.
‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியை சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளை கண்டு, அவரின் திறமைக்காகவே இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.
என்னிடம், “நீங்கள் யாரை போல் ஆக வேண்டும்..?” என்று யாராவது கேட்டால், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை போல் தொடர்ந்து வெற்றி இயக்குநராக வேண்டும் என்றுதான் சொல்வேன். இதன் காரணமாகவே இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் ஸாரிடம் கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ஆனந்தராஜ்.. என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஓரிரு காட்சியில் நடித்திருந்தாலும். முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் திரையில் கண்டு உற்சாகப்படுத்துவார்கள்.
என்னுடைய படங்களில் எப்போதும் வில்லனுக்கு தனி முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை எழுதுவேன். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களை வில்லனாக நடிக்க வைத்திருந்தேன். இந்தப் படத்தில் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இவரும் வித்தியாசமாகவேயிருப்பார். அனுராக் காஷ்யப் கதாப்பாத்திரத்தைவிட பல மடங்கு வலிமையானது இவருடைய கதாப்பாத்திரம்.
நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராக பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்துதான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது அவர்தான் எனது இந்த ‘கோப்ரா’ படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களை சந்தித்து கதையை விவரித்தபோது, மௌனமாக கேட்டார். படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும். நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால்… அவர் 100% அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஸனிஸ்ட் ‘சீயான்’ விக்ரம்.
படப்பிடிப்பின்போது எனக்கு உதவியாக பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ஏனெனில் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது அங்கு சீதோஷ்ண நிலை மைனஸ் முப்பது டிகிரி. கடந்த 30 ஆண்டுகளில் இதுதான் மோசமான பருவ நிலை என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தார்கள்
இந்த சூழலில்தான் நாங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதிக குளிர் காரணமாக பத்து நிமிடத்திற்கு மேல் பணியாற்றிய இயலாது. அதற்கு மேல் பணியாற்றினால் மூக்கிலிருந்து ரத்தம் வழியும். இத்தகைய கடினமான சூழலிலும் எங்களது உழைப்பை வழங்கி, இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக எனது உதவியாளர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.