யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.
இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
குடும்ப, டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.
இதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது படத்தின் பாடல் உருவாக்கத்திலும், பின்னணி இசை சேர்ப்பின்போதும் இசைஞானியும், யுவன் சங்கர் ராஜாவும் தன்னை அருகிலேயே விடவில்லை. தன்னை அழைக்கவேயில்லை. தனக்குத் தெரியாமலேயே இந்த வேலைகளை செய்து முடித்தனர் என்று பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “இத்திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிப் பார்க்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தக் கதை இதே திரையுலகத்தில் பல நாயகர்களால் நிராகரிக்கப்பட்ட கதைதான். அப்போதுதான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது.
முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா – யுவன் சங்கர் ராஜா – இளையராஜா மூவரும் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணங்களால் விலகிவிட்டார்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரிக்க முடிவெடுத்தபோது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே, இந்தப் படத்தின் காட்சிகள் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் பிறந்து, வாழ்ந்த தேனி, பண்ணைபுரத்தில் இந்தப் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.
நான் பல நடிகைகளிடம் இந்தப் படத்திற்கா கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது காயத்ரிதான் தைரியமாக முன் வந்து இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்தக் படத்திற்காக காயத்ரிக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.
நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை என்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிக்கொண்டு வருகிறேன். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம்தான் இது.
ஆனால், இந்தப் படத்தில் எனக்கு மோசமான சம்பவங்களும் நேர்ந்துள்ளது. இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள். படத்தின் பாடல் பதிவின் போதும், பின்னணி இசை சேர்ப்பின் போதும் ஒரு இயக்குநராக அவர்கள் என்னை அழைக்கவேயில்லை. என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. படத்தின் பாடல்கள் எழுதிய கவிஞர்கள்கூட யாரும் என்னிடம் அவர்கள் எழுதிய பாடல் வரிகளை காண்பிக்கவில்லை.
படத்தின் இயக்குநரான என்னிடம் எதுவும் கேட்காமல் யுவன் ஷங்கர் ராஜாவும், இசைஞானியும் இப்படி தன்னிச்சையாக நடந்து கொண்டது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. யுவனின் கூடா நட்பால்தான் நான் இந்த அளவுக்கு நிராகரிக்கப்பட்டேன்…” என மிகவும் வேதனையுடன் பேசியவர் சில நிமிடங்கள் பேச முடியாமல் மேடையிலேயே அழுதார். விஜய் சேதுபதி எழுந்து வந்து சீனு ராமசாமியை அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்றினார்.
படத்தின் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா இன்றைய நிகழ்ச்சிக்கு வராததும், அவரைப் பற்றியும், அவரது தந்தையான இசைஞானியைப் பற்றியும் இயக்குநர் சீனு ராமசாமி வெளிப்படையாக வைத்த குற்றச்சாட்டும் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.