1986-ம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டுள்ளது.
போதை பொருட்களை கடத்தும் கும்பல்கள் பற்றி பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். லோகேஷ் கனகராஜின் முந்தைய படைப்பான ‘கைதி’ படத்திலும் இதே கதைதான் அடிநாதமாக இருந்தது. இந்தப் படத்தில் இதே சப்ஜெக்ட் இருந்தாலும், கொஞ்சம் கூடுதலாக போதை பொருளை உருவாக்கும் கும்பல், அதை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள், தெருக்களில் விற்கும் சின்ன வகை வியாபாரிகள் என்று அனைவரைப் பற்றியும் இந்தப் படம் பேசியிருக்கிறது.
ரவுடிக் கும்பல் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் போலீஸ், போலீஸ் போர்வையில் ஒளிந்திருக்கும் ரவுடி கும்பல் என்று இரண்டு தரப்பிலும் பூனை, எலியாக மோதிக் கொள்பவர்களைத்தான் படத்தில் போட்டு வறுத்தெடுத்திருக்கிறார்கள்.
போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க நினைக்கும் உண்மையான காவல் துறையினர் ஒரு பக்கம்.. அதே போலீஸில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து கிடைக்கும் இடைவெளியில் போதை மருந்துகளை விற்பனை செய்து வரும் ரவுடிக் கும்பல் இன்னொரு பக்கம்.. இந்த இருவருக்கும் இடையில் போதை மருந்து நடமாட்டம் பற்றி போலீஸுக்கு தகவல் கொடுக்கும் அப்பாவிகளை உள்ளடக்கிய இன்ஃபார்மர்ஸ் உலகம்.
இந்த மூன்றுவித பராக்கிரமாவாசிகளுக்கும் இடையில் நடக்கும் போதை மருந்து சாம்ராஜ்யத்தின் மீதான போர்தான் இந்தப் படத்தின் கதை.
தன் மகனை அநியாயமாகக் கொன்றவர்களை பழி வாங்கும் தந்தையாக விக்ரம் கமல் போராடுவதுதான் படத்தின் கதையோ என்று நினைத்த இடத்தில் ஒட்டு மொத்தமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அழித்து போதை மருந்தில்லா சமூகத்தை உருவாக்க கமல் நடத்தும் யுத்தம்தான் இந்த ‘விக்ரம்’ படத்தின் மூலக் கதை.
பழைய ‘விக்ரம்’ படத்தில் அக்னிபுத்ரா என்ற அந்த ஏவுகணையை சலாமிய தேசத்தில் இருந்து மீட்டெடுப்பதோடு விக்ரம் என்ற அந்த தேசப்பற்று மிக்க ஏஜென்டின் கடமை முடிந்திருக்கும். இப்போது அந்த ஏஜெண்ட் என்னவானார்.. எப்படியிருக்கிறார் என்பதை வேறு ஒரு வடிவத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இன்றைக்கு அந்தப் பழைய ‘விக்ரம்’ கருப்புப் பூனை படையில் கமெண்டராக வேலை பார்த்து ரிட்டையர்டாகியிருக்கிறார். தனது ஒரே மகனை கொலைக் களத்தில் இழந்து, தனக்கிருக்கும் பேரனை பாதுகாக்க வேண்டி அவனையும், அவனது அம்மாவையும் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வருகிறார். அதே சமயம் மகனின் இறப்பு தாங்காமல் அதீத குடிமகனாகவும் இருந்து வருகிறார்.
ஆனாலும் ஒரு இரவுப் பொழுதில் அவரது மகனைப் போலவே முகமறியா முகமூடிக் கும்பலால் படுகொலை செய்யப்படுகிறார். இவருக்கு முன்பாகவே ஸ்டீபன் ராஜ் என்ற போதை மருந்து கடத்தலைத் தடுக்கும் பிரிவில் அதிகாரியாக இருந்தவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
உள்ளூர் போலீஸ் உயரதிகாரியான செம்பன் வினோத், இந்தத் தொடர் கொலைகளை செய்தவரைக் கண்டறிய தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸியை நடத்தி வரும் பகத் பாஸிலை புக் செய்கிறார்.
பகத் பாஸிலும் களத்தில் குதித்து விசாரிக்கத் துவங்க.. இந்த விசாரணை தினம்தோறும் வேறு, வேறு வடிவம் பெற்று திசை மாறுகிறது.
போதை மருந்து கடத்தலையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் சந்தானம் என்னும் விஜய் சேதுபதி இந்த விசாரணையின்போது குறுக்கே வர.. பகத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையில் மோதலாகிறது.
இந்த மோதல் வெடிப்பதற்குள்ளாக விஜய் சேதுபதி மீது வேறொரு முகமூடி கூட்டத்தில் இருந்து கொலை வெறித் தாக்குதல் நடந்தேறுகிறது. இந்த முகமூடி கூட்டத்திற்கு ‘கர்ணன்’ என்ற கமல்ஹாசன் தலைமை தாங்க.. இப்போது இந்த மோதல் மும்முனை தாக்குதலாக உருமாறுகிறது.
யார், யாரை குறி வைக்கிறார்கள்.. எதற்காகக் கொல்லத் துடிக்கிறார்கள்.. எப்படி கொலை செய்கிறார்கள் என்பதை ரத்தச் சகதியோடு சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
தனது வயதுக்கேற்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். தொழில் நுட்பத்தின் உதவியுடன் துப்பாக்கிகளை கையாண்டு சண்டை காட்சிகளில் மிரட்டலாய் ஆக்கிரமித்திருக்கிறார். அன்பறிவ் இரட்டையர்களின் சண்டை இயக்கத் திறமையால் கமல்ஹாசனின் அந்த ஸ்டைல் நடிப்பும் மிளிர்கிறது.
சில சென்டிமெண்ட் காட்சிகளில் மட்டுமே பழைய கமல்ஹாசனை பார்க்க முடிந்திருக்கிறது. இண்டர்வெல் பிளாக்கில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்விதத்தில் மொத்த தியேட்டரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் கமல்.
இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி சமூக அக்கறையுள்ள மனிதராகவும் இதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இதனால்தான் தன் மகனைக் கொன்றவர்களை பழி தீர்ப்பதைவிடவும் போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதே என் லட்சியம் என்று சொல்லி கை தட்டலையும் பெறுகிறார்.
பகத் பாசில் அவரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுமிடத்தில், “எனக்கு உதவி செய்யரீங்கன்னு தெரிஞ்சா நீங்கதான் எச்சரிக்கையா இருக்கணும்…” என்று பதிலுக்கு சொல்லி தனது அரசியல் களத்தையும் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறார் கமல்.
பொதுவாக கமல்ஹாசனின் படங்களில் அவரே அதிகமாக டாமினேட் செய்வார். ஆனால் இந்தப் படம் முழுக்க, முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக இருப்பதினால் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலுக்கும் சமமான இடத்தைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் கமல்.
கமலுக்கு அடுத்து படத்தில் அதிகம் ரகிகர்களை கவர்வது பகத் பாசில்தான். அவருடைய கண்களே தனித்துவமாக நடிக்கிறது. அந்தக் கண்களில் வாயிலாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் பகத். கொஞ்சம் கொடூரமாக.. அப்பாவியாக.. காதலனாக.. நண்பனாக.. என்று அவர் வரும் காட்சிகளிலெல்லாம் அவருடைய நடிப்பை கண்களாலேயே காண்பித்திருக்கிறார் பகத் பாசில்.
வில்லன் கைகளில் காயத்ரி சிக்கியிருக்கும் செய்தியறிந்து மனைவியை தேடி சாலையில் பகத் பாசில் ஓடி வரும் காட்சியில் அவருடைய மெளனமான நடிப்பு அக்மார்க் விருதுக்கான தரம்..!
எந்த ஹீரோவாக இருந்தாலும் சரி.. எந்தக் கேரக்டரானாலும் சரி.. நடிக்கத் தயங்காத விஜய் சேதுபதிக்கு கொடூரமான போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் வேடம்.
தன் பாடி லாங்குவேஜை வைத்துக் கொண்டும், கையை பின்னால் கட்டிக் கொண்டு அவர் நடந்து வரும் காட்சியிலும் ஒரு பக்கா திமிர் பிடித்தவனை கண் முன்னே காட்டுகிறார் விஜய் சேதுபதி.
இவருக்கு மூன்று மனைவிகள் என்பது ரொம்பவே டூ மச்சான கேரக்டர் ஸ்கெட்ச். இதனால் கதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. கொடூரமானவன் என்பதைக் காட்டுவதற்காக இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இவரது நடிப்பு வெறித்தனம்.
போலீஸ்காரரை கொலை செய்துவிட்டு சட்டை இல்லாமல் அவர் தெருவில் நடந்து வரும் அந்த அலட்சிய நடிப்பு விஜய் சேதுபதியின் தேர்வு மிகச் சரியானது என்பதையே காட்டுகிறது. போதை மருந்து உட்கொண்ட பின்பு அவர் சண்டை காட்சிகளில் இறங்கி அடிப்பதெல்லாம் அனிருத்தின் இசைக்கு நன்கு தீனி போட்டிருக்கிறது.
காயத்ரிக்கு சிறிய வேடம்தான் என்றாலும் பகத் பாசிலின் மனைவியான ஒரே காரணத்துக்காக அப்பாவியாக உயிரைவிடுகிறார். இதேபோல் கமல்ஹாசனின் மருமகளை பாதுகாத்து வரும் அந்த முன்னாள் கருப்புப் பூனை படையின் வீராங்கனையும் தன் பங்குக்கு சிறப்பான சண்டை காட்சியில் உயிரைக் கொடு்த்து நடித்து உயிரை விட்டிருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். இத்தனை பேரையும் வைத்து ஒரு படத்தை எடுத்து முடிப்பதிருப்பதே பெரிய சாதனைதான்.
நரேன் கமல்ஹாசனுக்கு நண்பராக அவருடைய டீமில் ஒருவராக நம்பிக்கைக்குரியவராக நடித்திருக்கிறார். குமரவேலும் கமலுக்கு நண்பராக வந்து அந்த ஒரே காரணத்துக்காகவே உயிரைவிட்டு அச்சச்சோ என்ற பாவத்தைச் சம்பாதிக்கிறார்.
கமல், ஃபகத், விஜய் சேதுபதி மூன்று பேரும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சி படத்தின் வெற்றிக்கு முன் கூட்டியே கிடைத்திருக்கும் வெற்றியாகக்கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கஞ்சா அடித்து சக்தியை பெற்று திடீர் வீரனாகும் விஜய் சேதுபதி கமலை வெளுத்து வாங்க, மூர்ச்சையாகி போகும் கமல்.. அந்த நேரத்தில் தனது பேரன் அழும் சத்தத்தால் கூடுதல் சக்தியைப் பெற்று எழுந்து வந்து விஜய் சேதுபதியை துவம்சம் செய்யும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.
காளிதாஸ், சந்தானபாரதி இருவரும் சொல்லித் தந்த மீட்டருக்குள் நடித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே எல்லாமே இரவில்தான் நடக்கும் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம். இந்தப் படத்திலும் அதே கதிதான்.
படத்தில் பெரும்பாலான காட்சிகளை இரவிலேயே படமாக்கியிருக்கிறார். அதனாலேயே ஒளிப்பதிவின் வித்தையைக் காட்ட முடியாமல் போய்விட்டதுபோலும். ஆனாலும் காட்சிக்கு, காட்சி ஆட்களும், கார்களும் வரிசையாக வந்து கொண்டேயிருக்க.. அனைத்தையும் பிரேமுக்குள் கொண்டு வந்து நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஹிட்டடித்துவிட்டன. மூன்று முக்கிய நடிகர்களுக்குமான தீம் மியூஸிக்கை அதகளப்படுத்தியிருக்கிறார் அனிருத். கிளைமாக்ஸ் காட்சியிலும், சண்டை காட்சிகளிலும் தனது வித்தையை குறையில்லாமல் காண்பித்திருக்கிறார் அனிருத்.
படத் தொகுப்பு, சவுண்ட் மிக்ஸிங், ஒலி, ஒளி வடிவமைப்பு என்று தொழில் நுட்பத்தில் இந்தப் படம் மிக சரியானதை மட்டுமே செய்திருக்கிறது.
பொதுவாக ரஜினி படம், கமல் படம் என்றால் அது அவர்களை மட்டுமே குறிக்கும். அவர்களது ரசிகர்கள் மட்டுமே படை திரண்டு ஓடி வருவார்கள். ஆனால் இந்த முறை அதிசயத்திலும், அதிசயமாக லோகேஷ் கனகராஜூக்காக தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. அவர்களின் அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார் லோகேஷ்.
இதற்குக் காரணம் கமல் படங்களில் எப்போதும் இருக்கும் குறியீடுகள் இதில் இல்லாமலும் லோகேஷ் கனகராஜின் குறியீடுகள் நிறையவே இருப்பதும்தான்.
இரவுக் காட்சிகள், பிரியாணி, ஜெயில், துப்பாக்கிகள் என்று தனது செட்டப்புகளை இந்தப் படத்திலும் தொடர வைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.
ஆனால் லாஜிக் கிலோ என்ன விலை என்ற கணக்கிலும், நம்ப முடியாத சம்பவங்களினாலும் திரைக்கதையை உருவாக்கி அதை ஒரு மேஜிக் போல செய்து ரசிகர்களை மெய்மறக்கச் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
நாட்டில் போலீஸே இல்லை என்பதை போலவும், காலிபர் துப்பாக்கிகளை வைத்துச் சராமரியாக சுட்டுக் கொன்றும், போலீஸும், மீடியாவும் துளிகூட கவலைப்படாமல் வராமல் இருப்பதும் இது எந்த நாட்டில் நடந்த கதை என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
அதிலும் பீரங்கியை வைத்தெல்லாம் கமல் தாக்குதல் கொடுப்பது ரொம்பவே டூ மச்சான திiரைக்கதையாகும். கூடுதலாக சில காட்சிகளை ஏன் வைத்திருக்கிறார்கள் என்பதே தெரியாத குழப்ப நிலையும் படத்தில் உண்டு. விக்ரம் கமல்ஹாசனுக்கும், கர்ணன் கமல்ஹாசனுக்கும் இடையிலான உறவு முறையையும் குழப்பத்தில் விட்டு வைத்திருக்கிறார்கள். படத்தில் பாதி வசனங்கள் சாதாரண ரசிகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தன்மையில் இருப்பது நமது துரதிருஷ்டம்தான்.
நிச்சயமாக படத்தில் 25 நிமிடக் காட்சிகளை நீக்கிவிடலாம். நீக்கினாலும் படத்தின் தன்மை கெடாது. அதோடு படமும் இப்போது இருப்பதைவிடவும் கிரிப்பாக இருந்திருக்கும். இவ்ளோ நீளத்தை முன் கூட்டியே ஊகிக்க முடிந்த கிளைமாக்ஸூக்காக வைத்திருக்கக் கூடாது. எதிர்பார்ப்பே இல்லாமல் போய்விடும். போய்விட்டது.
ஆனால் படத்தின் மையக் கதை, இயக்குநர் வைத்துள்ள ட்விஸ்ட்டுகள், ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் மேக்கிங் என்று இந்தப் படம் சுட்டிக் காட்டும் பிளஸ் பாயிண்ட்டுகள் இந்தப் படத்தை கமல் ரசிகர்கள் தங்களின் காலரை தூக்கிவிட்டுப் பெருமை கொள்ள வைத்திருக்கிறது.
‘விக்ரம்’ முதல் படத்தில் இடம் பெற்ற டைட்டில் பாடலான “நான் வெற்றி பெற்றவன்; இமயம் தொட்டுவிட்டவன்” என்று ஒலிக்கும் வரிகள் இந்த 2022 படத்திற்கும் பொருத்தமாகத்தான் அமைந்துள்ளது.
அடுத்து ‘விக்ரம்-3’, ‘கைதி-2’ என்று லோகேஷிடம் ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பும் சாத்தியக் கூறுகளையும் இந்தப் படம் தந்திருக்கிறது.
ஒரு கை குழந்தையைக் காப்பாற்றத்தான் படத்தில் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார் கமல். அந்த குழந்தை யார் என்பது அடுத்த பாகத்தில் தெரிய வரலாம்.
படத்தின் முடிவில் இந்த போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்கரவர்த்தியாக சூர்யாவை காண்பித்திருக்கிறார்கள். இவருக்கும், கமலுக்குமான மோதல்கள் அடுத்த பாகத்தில் வெளிவரும் போலத் தெரிகிறது.
ஏன் அத்தனை பெரிய போதை மருந்து சாம்ராஜ்யத்தின் தலைவனாக சூர்யாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் நாம் அடுத்த பாகத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
காத்திருப்போம்…!
RATING : 3.5 / 5