“இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணிக்கு வில்லனாக கே.பாக்யராஜ் வந்திருக்கிறார்…” என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
இந்த விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சினிமா சங்கத் தேர்தல்களில் என்றைக்குமே தோல்வி அடையாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் ராதாரவிதான். அவர் படத்தில்தான் வில்லன். உங்களுக்கெல்லாம் நாயகன்.
எனக்கும் டப்பிங் யூனியனில் மெம்பராக வேண்டும் என ஆசை. “எப்போது வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்…” என்று சொன்னார்.
இன்று சொந்த வாய்ஸில் பேசும் நடிகைகள் இல்லை. அவர்களின் குரல் நீங்கள்தான். நீங்கள்தான் நட்சத்திரங்களை வாழ வைக்கிறீர்கள். அண்ணன் ராதாரவிக்கு எதுவுமே தேவை இல்லை. உங்களுக்கு அவர் நல்லது செய்வார்.
அவருக்கு நான் ஒரு படத்தில் கூட வாய்ப்பு தந்ததில்லை. ஆனால், என் மீது அன்பாக இருப்பார். செல்வமணி சூப்பர். அவரே எத்தனை நாள் ஹீரோவாக இருப்பார்?… வில்லன் வந்துதானே ஆக வேண்டும். அதனால்தான் இயக்குநர் சங்கத்தில் தற்போது எதிர்ப்பு வந்துள்ளது. வரட்டும்.. இதெல்லாம் அண்ணன், தம்பிக்குள்தான். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.