தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி 2015-ம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில், 2018-ம் ஆண்டு அக்டோபருடன் பதவிக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து, செயற்குழு ஒப்புதலுடன் விஷால் தலைமையிலான நி்ர்வாகிகளின் பதவிக் காலம் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது.
பின்னர், 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப் பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வேறு ஒரு வழக்கினை தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாண சுந்தரம், 2019-ல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்தத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். “மீண்டும் தேர்தல் நடத்தப்படும்வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து கவனிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கினை விசாரித்து வந்தது.
இன்று இவர்கள் அளித்தத் தீர்ப்பில் ”தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019-ம் ஆண்டு ஜூன் 23-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும். மறு தேர்தல் நடத்தத் தேவையில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளனர்.