இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் இன்றைக்கு வெளியாகியிருக்கும் படம் ‘ஜெயில்’.
இந்தப் படத்தை முதலில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்தான் வெளியிடுவதாக இருந்தது.
திடீரென்று அந்த நிறுவனத்திடமிருந்து விலகி வேறொரு நிறுவனத்தின் மூலமாக படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து ஞானவேல்ராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சூழலில் நேற்றைய தினம் படம் தமிழகம் முழுவதும் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரச்சினை தீரும்வரையிலும் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டிய நிலையிலும் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டார்கள்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பாளர் தரப்பில் படம் வெளியாகிவிட்டதைச் சொல்லி அனுமதி கேட்டிருக்கிறார் ‘ஜெயில்’ படத்தின் தயாரிப்பாளர்.
ஆனால் நீதிபதியோ அதற்கு அனுமதி மறுத்துவிட்டாராம். தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அதற்குத் தனியாக மனு தாக்கல் செய்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.
இதனால் ‘ஜெயில்’ திரைப்படம் இன்று சனிக்கிழமை தியேட்டர்களில் திரையிடப்படாமல் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இல்லையெனில் இது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் அபாயம் உண்டு என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.