“கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதி…” என்று தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
“கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று, தமிழக அரசு பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. திரையரங்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த சூழலில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவு படத்தின் வசூலை பாதிக்கும் என்றும் விரைந்து இந்த விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது இதுதான் :
“திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டு வர பெரிய படங்களே உதவுகின்றன.
‘அண்ணாத்த’ மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பை தந்தது. திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு..!
ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் பள்ளிகளுக்கும், பொது இடங்களுக்கும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்திரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும்.
ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள்கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்து வரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள். அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.
தயை கூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்.. திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்…”
இவ்வாறு அதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேட்டுக் கொண்டுள்ளார்.