மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனஞ்செயா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவர் நடித்த படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – சாகர். படத் தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், எழுத்து – இயக்கம் – கார்த்திக் அத்வைத்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் விக்ரம் பிரபு பேசும்போது, “இன்றைய கொரோனா காலக்கட்டத்தில் ஒரு படத்தை தயாரிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் கொரோனா உச்சக் கட்டத்தில் இருந்தபோதுதான் இந்த படம் துவங்கியது.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இயக்குநர் கார்த்திக் அப்போது பேசிய தமிழைவிட, இப்போது பேசிய தமிழ் நன்றாக இருந்தது. பேசுவதும் புரிகிறது. அப்போது புரிவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இதற்காக கொரோனா காலகட்டத்தை கார்த்திக் நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை ஒரு இயக்குநராக இல்லாமல் ஒரு ரசிகராக இருந்து பார்த்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.அவருடன் பக்க பலமாக இருந்த இணை இயக்குநர் ஹரேந்தர் மற்றும் இயக்குநர்கள் குழுவுக்கு பாராட்டுக்கள்.
இந்தப் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பெரிய படம். இந்த படத்தில் இயக்குநரின் பணியும், ஒளிப்பதிவாளரின் பணியும் நன்றாக இருந்தது. எல்லா விஷயத்தையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் லைட் என்ற விஷயம் மிக முக்கியம். அதை மிக அற்புதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர். அதனை உடனிருந்து நான் பார்த்தேன்.
மற்ற நடிகர்களுடன் நடிப்பது ரொம்பவே நல்ல விஷயம். வாணி போஜனிடம் எப்போதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். எந்நேரமும் வாணி சிரித்த முகத்துடன் இருப்பார். அவருடைய அமைதியான முகத்தை பார்க்க நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர் குமாரசாமி பத்திக்கொண்டா பிரம்மாண்டமான செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாகரின் பாடல்களும் நன்றாக இருக்கிறது. ராப் பாடல் எல்லாருக்கும் நன்றாக பிடிக்கும்.
பொதுவாக ஆக்ஷன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ஆக்ஷன் மிக வித்தியாசமாக இருக்கும் தினேஷ் மாஸ்டர் சண்டைகள் அமைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு நடந்த நேரத்தில் இங்கு தேர்தல் நடந்தது. அதனால் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பரபரப்பிலும் எடிட்டிங் டீம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருந்து பணியாற்றினார்கள்..” என்றார் விக்ரம் பிரபு.