நடிகர் கமல்ஹாசன் அடுத்து தான் ஒரு மலையாள இயக்குநரின் படத்தில் நடிக்கப் போவதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
அந்தப் பேட்டியில் கமல் தற்போதைய தனது திரையுகலப் பயணம் குறித்துப் பேசுகையில், “தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறேன். இது முடிந்த பின்பு ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும். இதுவரையிலும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.
இதற்கடுத்து மலையாள இயக்குநரான மகேஷ் நராயணனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். ‘பாபநாசம்-2’ படம் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது..” என்று சொல்லியிருக்கிறார்.
கமல்ஹாசன் சொல்லியிருக்கும் இயக்குநர் மகேஷ் நாராயணன் ‘மாலிக்’ என்ற மலையாளப் படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் பகத் பாசிலும், நிமிஷா சஜயனும் நடித்திருந்தனர். ஓடிடியில் வெளியான அத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியையும், கவனத்தையும் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் கவன ஈர்ப்பால்தான் கமல்ஹாசன் மகேஷ் நாராயணனின் படத்தில் நடிக்கப் போகிறார். இது தமிழில் மட்டுமா.. அல்லது தமிழ் மற்றும் மலையாளத்திலும் தயாராகிறதா என்பது தெரியவில்லை.
‘மாலிக்’ படத்தின் நாயகனான பகத் பாசில்தான் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.