‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இணையாக பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர் அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளி.
தமிழில் இதற்கு முன்னர் ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி அறிமுக நடிகர் வெற்றி மற்றும் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
ஹிந்தியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘பதாய் கோ’. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி தமிழில் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று பெயர் வைத்திருக்கிறார் பாலாஜி. இந்தப் படத்தில்தான் பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறாராம்.
இந்தக் கதை மிகவும் சுவாரசியம் கொண்டது. வீட்டில் கல்யாண வயதில் இருக்கும் மகன் தன்னுடைய காதலியை வீட்டில் அறிமுகப்படுத்திவைத்து தங்களது திருமணம் பற்றிப் பேசப் போக.. அப்போதுதான் அவனுடைய அம்மா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
அம்மாவாக ஹிந்தியில் நீனா குப்தா நடித்திருந்தார். தமிழில் இந்தக் கதாபாத்திரத்தில் ஊர்வசி நடிக்கிறாராம். ஊர்வசியின் கணவராக சத்யராஜ் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சியில் துவங்க உள்ளது.