இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய நீண்ட காலமாக கிடப்பில் கிடைக்கும் ‘நரகாசூரன்’ படத்தின் வெளியீட்டு சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.
தனது முதல் படமான ‘துருவங்கள் 16’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய படம்தான் ‘நரகாசூரன்.’
சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிவுள்ள இப்படத்தில் அரவிந்த் சுவாமி, இந்திரஜித், ஸ்ரியா சரண், சுந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் திடீரென்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒரு தயாரிப்பாளராக இணைந்ததுதான் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தாமதத்திற்கு முழு காரணம்.
தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்தாலும் படம் முடியும்வரையிலும் கவுதம் மேனன் ஒரு பைசாகூட கார்த்திக் நரேனிடம் தரவில்லை. ஆனால், இதில் கவுதம் மேனின் பெயரும் இருப்பதால் கவுதம் மேனன் முன்பு பலரிடம் வாங்கியிருந்த கடன் கணக்கெல்லாம் இந்தப் படத்தின் மீது விழுந்தது. இதனால் இந்தப் படத்தை முடித்த பிறகும் கார்த்திக் நரேனால் இந்தப் படத்தை உடனடியாக வெளியிட முடியவில்லை.
இந்தக் காரணங்களினால் இந்தப் படத்தின் வெளியீடு பல மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பைனான்ஸ் சிக்கல் பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 13-ம் தேதியன்று சோனி லைவ் OTT தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது.