இயக்குநர் ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான ‘கொஞ்சம் பேசு’ என்ற ஆல்பத்தை நடிகர்கள் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் மூவரும் வெளியிட்டனர்.
‘என்ஜாய் எஞ்சாமி’, ‘குட்டி பட்டாசு’ என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘கொஞ்சம் பேசு’ என்ற ஆல்பம் உருவாகி உள்ளது.
இந்த ஆல்பத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்சி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்திருக்கிறார்.
ராஜூ முருகனின் உதவி இயக்குநரான சஞ்சய் இதில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகை சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார்.
இந்தப் பாடலை யுகபாரதி எழுத ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார், இதனை பிரதீப் குமார், நித்யஸ்ரீ பாடியுள்ளனர். சாண்டி நடனம் அமைக்க பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ஜிப்சி’, ‘அருவி’ போன்ற படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றின ரேமண்ட் படத் தொகுப்பு செய்துள்ளார். இந்தப் பாடலை இயக்குநர் ராஜு முருகனின் ‘குக்கூ ரெக்கார்ட்ஸ்’ குழுவினர் இயக்கியுள்ளனர்.
இந்தப் பாடல் பற்றி சஞ்சய் பேசும்போது, “நாங்கள் ‘ஜிப்சி’ படத்துக்காக நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்தபோது தனியிசை பாடகர்களையும் சந்தித்தோம். அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. நரேனை பார்த்ததும் பாடலாக உருவாக்க திட்டமிட்டோம்.
காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறு சிறு விரிசல்களை பிரிவாக மாறாமல் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது…” என்றார்.
இந்தப் பாடலை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.
இந்த ஆல்பம் பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது.